Wednesday, December 19, 2012

அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் செல்வதற்கு பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர் மட்டுமே தகுதியானவர்: அரசு அறிவிப்பு


அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் செல்வதற்கு பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2013-ம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் குறைந்தபட்சம் 31.3.2014 வரையில் செல்லத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று இந்திய ஹஜ் குழு முடிவு எடுத்துள்ளது.

எனவே, ஹஜ் 2013-ற்கான அறிவிப்பு பிப்ரவரி 2013-ல் வெளியிடப்படலாம் என்பதால் தற்போது பாஸ்போர்ட் இல்லாதவர்கள் அதற்கு முன்னதாகவே புதிதாக பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்து, அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே பாஸ்போர்ட் பெற்றுள்ளவர்கள் (குழந்தைகள் உள்பட), அவரவர்களுடைய பாஸ்போர்ட்டுகளின் செல்லுபடியாகக்கூடிய காலத்தை சரிபார்த்து, செல்லுபடியாகும் காலம் 31.03.2014 வரை இல்லையென்றால் அந்த பாஸ்போர்ட்டுகளை புதுப்பித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், பாஸ்போர்ட்டில் விசா பதிவிற்காக குறைந்தபட்சம் அருகருகே 2 பக்கங்கள் காலியாக இருக்குமாறு உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஹஜ் 2013-க்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய நிதி அமைப்பு (ஐ.எப்.எஸ்.) குறியீட்டு எண்ணை குறிப்பிடுவது அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பிக்கவிருக்கும் மனுதாரர்கள் ஐ.எப்.எஸ். குறியீடு உள்ள வங்கிகளில், புதிதாக வங்கிக் கணக்கைத் தொடங்குமாறும், அவ்வாறு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டதற்கு சான்றாக காசோலை ஒன்றினை (ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டு) சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza