புதுடெல்லி:தலித்துகளை விட முஸ்லிம்களின் நிலைமை மோசமாக இருக்கிறது.எனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ராம்கோபால் யாதவ் வலியுறுத்தினார்.
அரசுப் பணிபுரியும் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களுக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது.
மாநிலங்களவை திங்கள்கிழமை கூடியதும் சமாஜவாதி கட்சியின் அவைத் தலைவர் ராம்கோபால் யாதவ் எழுந்து, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினார்.
அவர் பேசுகையில், “தலித்துகளை விட முஸ்லிம்களின் நிலைமை மோசமாக இருக்கிறது. எனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். அப்போது சமாஜ்வாதி எம்.பி.க்கள் அனைவரும் அவையின் மையப்பகுதிக்கு விரைந்தனர். இதையடுத்து, இந்த விவகாரத்தைப் பூஜ்ய நேரத்தில் எழுப்புமாறு அவைத் தலைவர் ஹமீத் அன்ஸாரி கேட்டுக்கொண்டார். அவரது பேச்சைக் கேட்காமல், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்குமாறு பரிந்துரைத்த சச்சார் குழுவின் அறிக்கையை அமல்படுத்துமாறு சமாஜ்வாதி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
தொடர்ந்து நிலவிய கூச்சல் குழப்பத்தைத் தொடர்ந்து, அவையை 30 நிமிடங்களுக்கு ஹமீத் அன்ஸாரி ஒத்திவைத்தார். மீண்டும் அவை கூடிய போது, பேசிய ராம்கோபால் யாதவ், “எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பது தவறானது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்றால், முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீட்டை ஏன் வழங்கக் கூடாது? ” என்று கேள்வி எழுப்பினார். அவரது கோரிக்கைக்கு லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானும், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்தனர். சமாஜ்வாதி எம்.பி.க்களின் அமளி காரணமாக அவை பல முறை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, மாலையில் நடந்த வாக்கெடுப்பில் 245 எம்.பி.க்கள் கொண்ட மாநிலங்களவையில், 216 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மசோதாவுக்கு ஆதரவாக 206 வாக்குகளும், எதிர்த்து 10 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இதையடுத்து, மசோதா நிறைவேறியது. மசோதாவை எதிர்த்து வாக்களித்தவர்களில் 9 பேர் சமாஜ்வாதி எம்.பி.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துரைகள்:
Post a Comment