Friday, December 14, 2012

கோத்ராவில் வளர்ச்சிக்கு அப்பால் முஸ்லிம்கள்!



குஜராத்தில் பாரபட்சமான வளர்ச்சியை காண விரும்பினால் நீங்கள் கோத்ராவிற்கு செல்லலாம். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிரை பலிவாங்கிய ஹிந்துத்துவா பயங்கரவாதம் நிகழ்த்திக்காட்டிய இந்திய வரலாறு காணாத இனப்படுகொலைக்கு துவக்கம் குறித்த மண்ணில் வளர்ச்சியில் கூட பாரபட்சம் காட்டப்படுகிறது. சாலைகள் உடைந்து, கழிவு நீர் நிரம்பி, குடிநீர் கூட இல்லாத பகுதியாக இருந்தால் நீங்கள் உறுதியாக நம்பலாம்-அது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்று. கோத்ரா ரெயில் தீ விபத்து சம்பவத்திற்கு பிறகு வளர்ச்சி என்பதே முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கு எட்டவேயில்லை. மின்சாரம் மட்டுமே இங்குள்ள ஒரே ஆடம்பரம். தெருவிளக்கு, கழிப்பறை, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. முஸ்லிம்கள் வாழும் பகுதியில் உள்ள சாலைகள் உடைந்து சிதறிப்போய் கிடக்கின்றன. மழைக்காலங்களில் போக்குவரத்து முடங்கும். மாற்று சாலைக்கான கோரிக்கையும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. 

ஆனால், ஹிந்துக்கள் வாழும் பகுதிகளில் நிலைமையே வேறு. நல்ல சாலை, குடிநீர், பள்ளிக்கூடம், அரசு திட்டங்கள் ஆகியவை அனைத்தும் ஹிந்துக்கள் வாழும் பகுதிகளுக்கு மட்டுமே. 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த முஸ்லிம் இனப்படுகொலைக்கு பிறகு இங்கு முஸ்லிம்களும், ஹிந்துக்களும் தனித்தனியாக வாழ்கின்றார்கள். இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லையான வாகா பார்டர் போல மூன்று பிரதேசங்கள் கோத்ரா நகரில் உள்ளன. முஸ்லிம் பகுதிக்கு அருகில் உள்ள ஹிந்து காலனியின் கேட் காலை ஆறரை மணிக்கு திறக்கும். இரவு எட்டரை மணிக்கு மூடப்படும். எல்லைகளில் இப்பொழுதும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

கோத்ரா ரெயில்வே நிலையத்திற்கு அருகே வாகனங்களை கூட முஸ்லிம்களும், ஹிந்துக்களும் தனித் தனியே 2 இடங்களில் பார்க் செய்கின்றனர். முஸ்லிம்கள் வாழும் போலன் பஜார், ஓல்ட் வெஜல்பூர் ரோடு, ஓஹ்வாட், கோண்டா, குயா ஆகியன ஹிந்துக்கள் வாழும் பகுதிகளை விட வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியுள்ளன. ஹிந்துக்கள் வாழும் பகுதிகளான கோத்ரா கிராமீயபகுதி, லுனாவாலா சாலை, தாஹோத் சாலை, பரோலி சாலை ஆகிய இடங்களில் பயணிக்கும் பொழுது மாற்றத்தை நேரடியாக காண முடியும். தார் போடப்பட்டு சீராக்கப்பட்ட சாலைகளும், அடிப்படை வசதிகளும் இப்பகுதிகளில் ஏராளம். அரசு திட்டங்களுடன், பா.ஜ.க எம்.பியின் வளர்ச்சி நிதியும் இப்பகுதிகளுக்கு மட்டுமே செலவிடப்படுகின்றன. 

முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் புதிய வீடுகளை கட்டவோ, கட்டிடங்களை கட்டவோ நகராட்சி அனுமதி வழங்குவதில்லை. அனுமதி கிடைக்க வேண்டுமென்றால் பல்வேறு அரசு அலுவலகங்களின் படிகளில் ஏறி இறங்க வேண்டும். ஆனால்,ஹிந்துக்கள் பகுதிகளில் கட்டிடங்களை கட்ட எவ்வித தடைகளும் இல்லை. விண்ணப்பித்தால் உடனே அனுமதி கிடைத்துவிடும். இனப்படுகொலையால் வாழ்விழந்த மக்களுக்கு வளர்ச்சியை கூட கண்ணில் காண்பிக்காமல் துரோகமிழைத்து வருகிறது மோடி அரசு

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza