Wednesday, December 5, 2012

5 ஆண்டுகளில் 191 போலி என்கவுன்டர்கள்:மனித உரிமைகள் கழகம் தகவல்


புதுடில்லி : கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 191 போலி என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்‌ட்டில் தேசிய மனித உரிமைகள் கழகம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் நடைபெற்ற போலி என்கவுன்டரில் சொராபுதீன் , துளசிராம் பிரஜபதி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலி என்கவுன்டர்கள் குறித்த அறிக்கையை மனித உரிமைகள் கழகம் தாக்கல் செய்துள்ளது. 


அதிர்ச்சி அளித்த அறிக்கை:

அதிகளவில் போலி என்கவுன்டர் நடைபெற்ற மாநிலங்களில் மணிப்பூர் முதலிடத்தில் உள்ளது.
மணிப்பூர் அரசு சார்பில் கடந்த 30 ஆண்டுகளில் நடத்தப்பட்ட என்கவுன்டர்களில் இதுவரை சுமார் 1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கழகம் அளித்த அறிக்கை தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. நீதிபதி அஃதப் அலம் மற்றும் ரஞ்சனா பி தேசாய் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் கடந்த முறை விசாரணையின் போது, மோதலின் போது இச்சம்பவம் நடைபெற்றதா எனவும், என்கவுன்டரில் கொல்லப்பட்ட இருவரும் ஒருவரை கொன்றதற்கு பதில் நடவடிக்கையாக அம்மாநில அரசு இது போன்று செய்ததா எனவும் இது தான் அரசின் நிலைப்பாடா எனவும் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் மனித உரிமைகள் கழகம் தாக்கல் அறிக்கை தாக்கல் செய்தது. மணிப்பூரை தொடர்ந்து குஜராத்தில் போலி என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளது. 
அரசுக்கு எதிரான புகார்கள்

: மனித உரிமைகள் கழக அறிக்கையின்படி 2007ம் ஆண்டு முதல் 2012 ம் ஆண்டு வரை ஏராளமான சட்டத்திற்கு புறம்பான கொலைகளையும் அரசே செய்துள்ளதாகவும், இது போன்ற போலி என்கவுன்டர்கள் தொடர்பாக இதுவரை 1671 புகார்கள் அல்லது தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற 191 என்கவுன்டர் வழக்குகளுக்கும் ரூ.10.51 கோடி நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது. போலி என்கவுன்டர் என நிரூபிக்கப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது. 

சுப்ரீம் கோர்ட் தகவல் :

குஜராத் போலி என்கவுன்டர் உட்பட அனைத்து வழக்குகளிலும் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதற்கு அம்மாநில அரசுகளின் பங்கு பெருமளவில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை, தடயவியல் அறிக்கை உள்ளிட்ட அனைத்தும் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாமதங்களை அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளது. இந்த கொலைகள் சரியான என்கவுன்டரா அல்லது போலி என்கவுன்டரா என்பது குறித்த முடிவான அறிக்கையை அரசு சார்பில் தாக்கல் செய்யப்படவில்லை.

வழக்கு விபரங்கள் :

மணிப்பூரில் நடத்தப்பட்ட 71 போலி என்கவுன்டர் வழக்குகளில் இதுவரை 3 மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கில் மட்டும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. 2007 ல் 5 போலி என்கவுன்டர்களும், 2008ல் 17ம், 2009ல் 19ம் நடைபெற்றுள்ளதாக மனித உரிமைகள் கழகம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் கழகத்தின் இந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து மாநிலங்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விதிக்க வேண்டும் எனவும், அரசு சார்ந்த வழக்குகளை தாமதமின்றி 3 மாதங்களுக்குள் விசாரித்து அறிக்கை அளிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் எனவும் மனித உரிமைகள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza