Wednesday, November 7, 2012

டெல்லி கலை நிகழ்ச்சியில் இஸ்ரேல் நாடகத்திற்கு கடும் எதிர்ப்பு!

incabi
புதுடெல்லி:டெல்லியில் துவங்கிய 6-வது சர்வதேச கலை நிகழ்ச்சியில்(International Art Festival) இஸ்ரேலிய நாடகத்தை அரங்கேற்ற கடும் எதிர்ப்பு நிலவுகிறது.ஃபலஸ்தீன் மீது ஆக்கிரமிப்பை தொடரும் இஸ்ரேலின் கலைப்படைப்புகளை புறக்கணிக்க கோரி அகாடமிக் மற்றும் கலைத்துறையில்  பிரச்சாரம் செய்து வரும் Indian Campaign for the Academic and Cultural Boycott of Israel (INCABI) என்ற அமைப்பின் உறுப்பினர்கள் இஸ்ரேல் நாடகத்தை அரங்கேற்ற கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளையில் திட்டமிட்டபடி நாடகம் அரங்கேற்றப்படும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சமூக ஆர்வலரும், புக்கர் விருது பெற்றவருமான அருந்ததி ராய், கவிஞர் கே.சச்சிதானந்தன், எழுத்தாளர் கீதா ஹரிகரன், திரைப்பட-நாடக இயக்குநர் ஆனந்த் பட்வர்தன், ஸஈத் மிர்ஸா, எம்.கே.ரெய்னா உள்பட 50-க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் சர்வதேச கலை நிகழ்ச்சியில் இஸ்ரேல் நாடகத்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கலை நிகழ்ச்சியில் இஸ்ரேலின் இசை நாடக நிகழ்ச்சியை காமரி தியேட்டர் அரங்கேற்ற திட்டமிட்டுள்ளது. எட்னா மாஸ்யாவின் ‘Stempenyu’ என்ற தயாரிப்பை அரங்கேற்ற காமரி தியேட்டர் என்ற இஸ்ரேல் நிறுவனம் இந்தியாவிற்கு வந்துள்ளது. ஃபலஸ்தீனில் இஸ்ரேல் சட்டவிரோதமாக கட்டிய கட்டிடத்தில் காமரி தியேட்டர் நிறுவனம் இயங்குகிறது. இஸ்ரேலியர்களுக்காகவே தயாரிக்கப்பட்ட நாடகத்தை அரங்கேற்ற அரங்கை அனுமதித்துள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டுகின்றனர்.
நாடகத்தை புறக்கணிக்கக் கோரும் பிரசுரங்களை நாடக எதிர்ப்பாளர்கள் விநியோகித்தனர். இஸ்ரேல் எதிர்ப்பு முழக்கங்களை எழுதிய டீ ஷர்ட்டுகளுடன் INCABI இன் தன்னார்வ தொண்டர்கள் நிகழ்ச்சி நடைபெறும் சிரிஃபோர்ட் ஆடிட்டோரியத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza