புதுடெல்லி:அஸ்ஸாம் துயர் துடைப்பு முகாம்களில் அவசர சேவை கிடைப்பதற்காக அரசு சாரா நிறுவனமான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசனின் (ஆர்.ஐ.எஃப்) நடமாடும் மருத்துவமனை தனது பயணத்தை துவக்கியுள்ளது.
கண அதிகார நாளிதழின் ஆசிரியரும், குவஹாத்தி பல்கலைக் கழக பேராசிரியருமான திலீப் நடமாடும் மருத்துவமனையை துவக்கி வைத்தார். குவஹாத்தி உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரும், ஆர்.ஐ.எஃப் ட்ரஸ்ட் உறுப்பினருமான ராஷித் அஹ்மத் சவுதரி கொடி அசைத்தார்.
ரிஹாபின் அஸ்ஸாம் மாநில தலைவர் இனாமுத்தீன் அஹ்மத், துணைத் தலைவர் டி.ஆர்.அப்துல் பஸர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தொலைதூரங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் சென்று சேவை புரிய மருத்துவர், நர்ஸ், ஓட்டுநர் அடங்கிய அனைத்து வித வசதிகளும் கொண்ட வாகனத்தை மருத்துவ சேவைக்கு ரிஹாப் அர்ப்பணித்துள்ளது. மேலும் அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான்காவது கட்டமாக ஆடைகளை விநியோகிக்கும் பணியையும் ரிஹாப் துவக்கியுள்ளது.
போடோ தீவிரவாதிகளின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். ஏராளமானோருக்கு உயிரும், சொத்துக்களும் நஷ்டமடைந்தன. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் விநியோகித்து வருகிறது.
அஸ்ஸாமில் கலவத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்காக ரிஹாப் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான தொகையை செலவழித்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக அஸ்ஸாம் முகாம்களில் தங்கியிருக்கும் 24 ஆயிரம் அகதிகளுக்காக 1000 வீடுகளை கட்டிக்கொடுப்பதற்காக ரிஹாப் 15 ஏக்கர் நிலத்தை போகைகான் மாவட்டத்தில் உள்ள ஹபாசாரா கிராமத்தில் வாங்கியுள்ளது. இங்கு இதுவரை 60 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 25 வீடுகள் ஏழை குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன
0 கருத்துரைகள்:
Post a Comment