சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ ) கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் நேற்று (11.11.2012) மதுரையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் செய்யது இப்ராஹிம் வரவேற்புரையாற்றினார். மாநில பொது செயலாளர் நெல்லை முபாரக், மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர்கள் வி.எம். அபுதாகிர், அப்துல் சத்தார், நாஞ்சில் செய்யது அலி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் டி. ரத்தினம் அண்ணாச்சி, அப்துல் சலாம் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள் பொதுச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது நன்றியுரையாற்றினார்.
இச்செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :
1. தமிழகத்தில் அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுக்கடைகளை நடத்துவது என்பது மாபெரும் அவமானம் ஆகும். இதனால் மிகப்பெரிய கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. லட்சக்கணக்கான குடும்பங்கள் பெரும் துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் நலனில் அக்கரையுள்ள அமைப்புகளாலும், அரசியல் கட்சிகளாலும் எழுப்பப்பட்டு வருகிறது. இத்தகைய போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி தனது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும் ,பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி கடந்த 2 மாதமாக தொடர் போராட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் நடத்தியது. இதில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கும் ஆதரவு தந்த பொதுமக்களுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி நன்றியினை தெரிவித்து கொள்கிறது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா ? என்று சட்ட சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த தமிழக அமைச்சர், மத்திய அரசு அமல்படுத்தினால் தமிழக அரசும் அமல்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை அரசு பொய்யாக்கி உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக மறு பரிசீலனை செய்து எதிர்கால சமூகத்தை பாதுகாக்க பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டு கொள்கிறது.
2. தமிழகத்தில் ஜாதி, மத மோதல்கள் அதிகரித்து இருப்பது கவலைக்குரியது. பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் குரு பூஜையின் போது நடைபெற்ற ஜாதி கலவரத்தில் இது வரை 9 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். மருது பாண்டியர் குரு பூஜையின் போது காவல் துறை சார்பு ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பல்வேறு வியாபார நிறுவனங்களும், அரசு பேருந்துகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு கலவரத்தை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பூரண அமைதியை நிலை நாட்ட வேண்டும்.
முக்குலத்தோர் மற்றும் தலித் சமுதாய மக்கள் சமீபத்தில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகளை மறந்து அமைதியையும், ஒற்றுமையையும் நிலை நாட்ட வேண்டும் என இச்செயற்குழு கேட்டு கொள்கிறது.
சமுதாயத்தலைவர்களுக்கு நடைபெறும் குரு பூஜைகள் வருடாவருடம் தமிழகத்தில் பெரும் பதட்டங்களையும், சாதிக் கலவரங்களையும், சமூகங்களுக்கு மத்தியில் வெறுப்புகளையும், உயிர் பலிகளையும் ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.
வரும் காலங்களில் இன்னும் பல சமுதாயத்தலைவர்களுக்கு புதிதாக குரு பூஜை விழா நடத்தக் கூடிய வாய்ப்பும் உள்ளது. எனவே அமைதியையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தும் பொருட்டு இந்த அனைத்து குரு பூஜை நிகழ்ச்சிகளுக்கும் முற்றிலுமாக தடை விதிக்குமாறு இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
3. பசும் பொன் தேவர் குரு பூஜையின் போது இராமநாதபுரத்தில் ஜாதி கலவரத்தை மத மோதலாக திசை திருப்பும் விதமாக முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்களையும், வாகனங்களையும் ஒரு வன்முறை கும்பல் தாக்கியுள்ளது. இப்போதும் அங்கு உள்ள வியாபாரிகள் அச்சத்துடனே உள்ளனர். இந்த தாக்குதலுக்கு காரணமான வன்முறை கும்பல் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டு கொள்கிறது. மேலும் சங்பரிவார இயக்கத்தை சார்ந்த ஒருவர் தாக்கப்பட்டார் என்பதை காரணம் காட்டி கோவையில் பள்ளி வாசல் இமாம் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். மேலும் பொதுச் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசும், காவல் துறையும் இராமநாதபுரம் மற்றும் கோவையில் மத கலவரத்தை உருவாக்க முயற்சிக்கும் விசமிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டு கொள்கிறது. வதந்திகளை நம்பாமல் அமைதி காக்குமாறும், ஒற்றுமையை நிலைநாட்டுமாறும் இரு சமூக மக்களை எஸ்.டி.பி.ஐ கட்சி கேட்டுக் கொள்கிறது.
4. தருமபுரி மாவட்டத்தில் ஒரு காதல் திருமணத்தை காரணம் காட்டி மூன்று கிராமங்கள் மீது மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு தாக்குதல் நடத்தியதில் முன்னூறுக்கும் அதிகமான வீடுகளை தீக்கிரையாக்கியுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்துள்ளனர். பெண்களையும், குழந்தைகளையும் தாக்கி பொருட்களை சூறையாடியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து நிகழும் இந்த கொடூர நிகழ்வுகள் தீண்டாமை கொடுமையின், ஆதிக்க மனோபாவத்தின் ஒரு பகுதி என இச்செயற்குழு கருதுகிறது. இந்த கொடூர நிகழ்வுகளுக்கு காரணமானவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி கேட்டுக் கொள்கிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment