லண்டன்:உலகின் பல்வேறு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. தடைகளால் துயரத்தில் ஆழ்ந்துள்ள காஸ்ஸாவின் மீது இஸ்ரேல் பயங்கரவாத ராணுவம் விமானத் தாக்குதலை வலுப்படுத்தியுள்ள சூழலில் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன.
லண்டனில் இஸ்ரேல் தூதரகத்தின் முன்னால் ஃபலஸ்தீன் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கண்டனப் போராட்டத்தை நடத்தினர். காஸ்ஸாவில் இஸ்ரேலின் கூட்டுப்படுகொலையை தடுத்து நிறுத்துங்கள்! மேற்காசியாவை போர் சூழலில் இருந்து காப்பாற்றுங்கள்! மனித உரிமை மீறலை தடுத்து நிறுத்துங்கள்! உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பி மக்கள் தூதரகத்திற்கு வெளியே கண்டனப்பேரணியை நடத்தினர்.
அதேவேளையில், காஸ்ஸாவை இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற எகிப்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரிட்டனில் உள்ள அரபு மனித உரிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேசச் சட்டங்களை மீறி காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை தடுக்க உலக நாடுகள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. காஸ்ஸாவின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக நியூயார்க், பாரிஸ், லண்டன், சிட்னி, பெய்ரூத் ஆகிய நகரங்களிலும் ஃபலஸ்தீன் ஆதரவாளர்கள் கண்டனப்பேரணியை நடத்தியுள்ளனர்.
நியூயார்க்கில் இஸ்ரேல் தூதரகத்தின் முன்பு கண்டனப்பேரணி நடந்தது. காஸ்ஸாவின் மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்த மக்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
பாரிஸில் சட்ட அமைச்சகத்திற்கு வெளியே கண்டனப்பேரணி நடைபெற்றது. இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பான பிரான்சின் நிலைப்பாடைக் குறித்து விளக்கம் அளிக்குமாறு கண்டனப்பேரணியில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சிட்னியில் பராமாட்டா மாவட்டத்தில் ப்ரென்னர் சாக்லேட் ஷாப் செயின் முன்பு ஃபலஸ்தீன் ஆதரவாளர்கள் கண்டனப்பேரணியை நடத்தினர். இஸ்ரேல் நிறுவனமான ஸ்ட்ரோஸ் குழுமத்துடன் இணைந்து வர்த்தகம் நடத்தும் நிறுவனம் தான் ப்ரென்னர் சாக்லெட் ஷாப் செயின்.
பெய்ரூத்தில் ஐ.நா தலைமையகத்தின் முன்னால் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது நடத்தும் தாக்குதலை காட்டுமிராண்டித்தனமானது என்று வெனிசுலாவின் அதிபர் ஹியூகோ சாவேஸ் கூறியுள்ளார். 2009 ஆம் ஆண்டு இஸ்ரேல் காஸ்ஸா மீது நடத்திய தாக்குதலின் போது இஸ்ரேலிய தூதரை வெளியேற்றி கண்டனம் தெரிவித்தது வெனிசுலா என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல், காஸ்ஸா மீது நடத்தும் தாக்குதலை காட்டுமிராண்டித்தனமானது என வர்ணித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸலேஹி, காஸ்ஸா மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலை நிறுத்த சர்வதேச அமைப்புகள் விரைவாகவும், தீவிரமாகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஈரானின் தலைநர் டெஹ்ரான் மற்றும் 700 நகரங்களில் இஸ்ரேலை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. ’அனைவரும் ஃபலஸ்தீன் மக்களின் எதிர்ப்புப்போராட்டத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும். அவர்கள் சியோனிச அரசுக்கு சரியான பதிலடியை (ராக்கெட்டுகளை ஏவி) கொடுத்துள்ளார்கள் என்று ஆயத்துல்லாஹ் அஹ்மத் கடாமி கூறியுள்ளார்.
இதனிடையே சூழலில் நிலைமைகளை மதிப்பீடு செய்யவும், தீர்வுகளைக் குறித்து ஆராயவும் துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானும், எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸியும் தொலை பேசியில் விவாதித்தனர்.
எர்துகான் எகிப்திற்கு வந்தால் ஃபலஸ்தீன் விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிப்போம் என்று முர்ஸி கூறினார். காஸ்ஸா தாக்குதலை இரு நாடுகளும் ஏற்கனவே கண்டித்திருந்தன.
இதனிடையே இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக துருக்கி அரசு அறிவித்துள்ளது. இதனை துருக்கி துணை அதிபர் புலைன் ஆரஞ்ச் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். யூத ராணுவத்தின் நடவடிக்கை மனிதகுலத்திற்கு எதிரானது என்றும், பிராந்தியத்தில் அமைதி நிறுவப்படும் வரை இஸ்ரேலுடனான உறவை முடக்குவதாக அவர் கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment