Friday, November 9, 2012

தகவல் கேட்டவருக்கு வெற்று தாள்களை அளித்து மோசடி : தகவல் ஆணையத்தில் புகார்


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் கேட்டு விண்ணப்பித்தவருக்கு, வெற்று தாள்களை அளித்து, அதிகாரிகள் மோசடி செய்துள்ள சம்பவம் அம்பலமாகியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநில தகவல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் தாலுகா, பெரகம்பி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பெரகம்பி ஊராட்சியில், 2011ம் ஆண்டு, 120 ஏக்கர் நில பரப்பில், கருவேல மரங்களை வெட்ட நடந்த ஏலம் தொடர்பாகவும், அதன் மூலம் கிடைத்த நிதி செலவிடப்பட்டது தொடர்பான விவரங்களை பெற, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார்.

இது குறித்து மனுதாரர் சீனிவாசன் கூறியதாவது:தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், நான் கேட்ட தகவல்கள் அடங்கிய ஆவணங்கள், 3,216 பக்கங்கள் வருவதாகவும், இதற்கு ஒரு பக்கத்துக்கு பிரதி எடுக்கும் கட்டணமாக, ஐந்து ரூபாய் வீதம், மொத்தம் 16,080 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும் என, ஊராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதன்படி, பெரகம்பி ஊராட்சியின் பெயருக்கு, 16,080 ரூபாய்க்கு வங்கி வரைவோலை (டிடி) எடுத்து, கடந்த ஜூலை 20ம் தேதி, பதிவுத்தபால் மூலம் அனுப்பினேன். இதன் பிறகும் எனக்கு தகவல் கிடைக்காததால், ஊராட்சி நிர்வாகத்திடம் மீண்டும் முறையீடு செய்தேன்.இதையடுத்து, கடந்த செப்டம்பர் 4ம் தேதி, பெரகம்பி ஊராட்சி நிர்வாகத்திடமிருந்து, பதிவுத்தபால் மூலம் ஆவண நகலை அனுப்பினர்.

அதில், 2,728 பக்கங்கள் மட்டுமே இருந்தன. அதிலும், 1,700 பக்கங்கள் வெற்று தாள்களாக உள்ளன. மேலும், நான் கேட்ட கேள்விகளுக்கு தொடர்பில்லாத, விஷயங்கள் குறித்த, 268 பக்கங்கள் அதில் இருந்தன.இது குறித்து தகவல் ஆணையத்தில் கடந்த மாதம் 22ம் தேதி முறையிட்டேன். இதை தகவல் ஆணையர் டி.சீனிவாசன் விசாரித்தார். அப்போது, "ஆவண நகலுக்கு பிரதி எடுக்க ஒரு பக்கத்துக்கு ஐந்து ரூபாய் வசூலித்தது தவறு. மேலும், 1,700 பக்கங்களை வெற்று தாள்களாக அனுப்பியதும் தவறு' என, கூறி கண்டித்தார். மேலும், மனுதாரரிடம் வசூலித்த பணத்தை திருப்பி அளிக்கவும், கேட்கப்பட்ட தகவலை இலவசமாக அளிக்கவும் உத்தரவிட்டார்.

ஆனால், தற்போது வரை பெரகம்பி ஊராட்சி நிர்வாகம், இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தகவல் ஆணையத்தில் தற்போது மனு அளித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

சட்டப்படி தகவல் கேட்டவரிடம், 16 ஆயிரம் ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு, வெற்று தாள்களை அளித்து அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளது, தகவல் உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza