சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அல்ஹஸா – தம்மாம் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள அப்கைக் - அயின்தார் கிராமத்தில் செவ்வாய்கிழமை அன்று மாலை ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் எதிர்பாராதவிதமாக மண்டபத்திற்குள் சென்ற உயர் அழுத்த மின்சார இழை கீழே விழுந்து தீப்பொறி ஏற்பட்டது.
அந்த மின்சார இழை திருமண மண்டபத்தின் வாயிலில் உள்ள ஒரு இரும்பு கதவின் மீது விழுந்து, அதனருகில் நின்றவர்கள் அந்த கதவைத் தொட்டதும் பட்டாசு வெடித்தது போன்று படபடவென சத்தம் எழுந்தது. கதவு வழியாக மின்சாரம் பாய்ந்ததால், கதவைத் தொட்ட பலரும் இறந்தது தெரியவந்துள்ளது.
மின் தாக்குதலுக்கு ஆளான 5 குழந்தைகள் உட்பட மொத்தம் 27 பேர் பலியாயினர். படுகாயமடைந்த 37-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று தெரிய வருகிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கிழக்கு மாகாணத்தில் கத்தீஃப் நகரில் நடைபெற்ற இது போன்ற ஒரு விபத்தில் 76 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
"கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் இளவரசர் முஹம்மது பின் ஃபஹத் பின் அப்துல் அஜீஸ், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று சவூதி உள்நாட்டு பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் கர்னல் முஹம்மது அல் அஜ்மி தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment