தக்பீர் சொல்லும் முறை
الله أكبر الله أكبرلااله الا الله والله أكبر الله أكبر ولله الحمد
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்., லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து.
9. ஈத் தொழுகைக்காக நடந்து செல்வது
பெருநாள் தொழுகைக்காக நடந்து செல்வது நபி வழியாகும் என அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் . (ஆதாரம் திர்மிதி)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈத் தொழுகைக்கு நடந்தே சென்று நடந்தே திரும்பி வருவார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் ஸஃது ரளியல்லாஹு அன்ஹுஆதாரம்: இப்புனுமாஜா(1070) ஆகவே, ஈத் தொழுகைக்கு நடந்து செல்வதும், நடந்தே திரும்பி வருவதும் ஸுன்னத்தாகும்.
10. ஈத் தொழுகையின் நேரம்
சூரியன் உதயமாகி தொழுகை தடுக்கப்பட்ட நேரம் முடிந்த பிறகு பெருநாள் தொழுகை தொழுவது நபிவழியாகும் (புகாரி,அபூதாவூது,இப்னு மாஜா, ஹாக்கிம்)
குறிப்பு: பொழுது புலர்ந்து சுமார் இருபது நிமிடங்கள் வரை தடுக்கப்பட்ட நேரமாகும். அதன் பின்னர் தொழலாம்.
11. ஒருவழியாகச் சென்று மறு வழியாக திரும்புவது
பெருநாள் தொழுகைக்குச் செல்லும்போது ஒரு வழியாகச்சென்று மறுவழியாகத் திரும்புவது நபி வழியாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெருநாள் தொழுகையிலிருந்து (திரும்பும் போது சென்றவழியாக இல்லாமல்) வேறு வழியாக திரும்பி வருவார்;கள். ஏன ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி)
இன்று சவூதி அரேபியாவில் இந்த நபி வழியைக் கடைபிடிப்பதால் டிராபிக் நெரிசலை தவிர்ப்பதற்கும்,ஒழுங்கு முறைகளை கடைபிடிப்பதற்கும் வசதியாக இருப்பதைக் காணமுடிகிறது.
12. அதான், இகாமத் கிடையாது
இரு பெருநாள் தொழுகைகளுக்கும் அதான் இகாமத் கிடையாது என ஜாபிர் இப்னு ஸமூராரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதானும் இகாமத்தும் இல்லாமல் பெருநாள் தாழுகையைத் தொழுதுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு ஆதாரம்:அஹ்மத், முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னு மாஜா.
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒருமுறையல்ல., இருமுறையல்ல.பாங்கும் இகாமத்துமின்றி (பலமுறைகள்) பெருநாள் தொழுகையைத் தொழுதிருக்கிறேன். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமூரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூது,திர்மிதி, அஹ்மத்)
13 பெருநாள் தொழுகைக்கு முன் பின் ஸுன்னத் கிடையாது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்னும் பின்னும் (அவர்கள் வேறு எந்த தொழுகையையும்;) தொழவில்லை. என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். அவர்களுடன் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் இருந்தார்கள். ஆதாரம் புகாரி - 989.
14. பெருநாள் தொழுகையும் தக்பீர்களும்
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள் ஆகிய இரண்டு பெருநாட்களிலும் ஆண்களும் பெண்களும் இந்த சிறப்புத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.
பெருநாள் தொழுகை இரு ரகஅத்களாகும்.
முதல் ரகஅத்தில் தனா ஓதிய பிறகு ஏழு தக்பீர்கள் கூறவேண்டும்.கூறும் சமயத்தில் கைகளை உயர்த்தவேண்டியதில்லை. பிறகு அல்ஹம்து மற்றும் வேறு சூராக்களை இமாம் சப்தமிட்டு ஓதவேண்டும்.
இரண்டாம் ரகஅத்தில் அல்ஹம்து ஓதுமுன் ஐந்து தக்பீர்கள் கூறவேண்டும். இதிலும் கைகளை உயர்த்த வேண்டியதில்லை.அதைப்போல தக்பீர்களுக் கிடையில் எதையும் ஓதவேண்டியதில்லை.
ஏழும் ஐந்தும் தக்பீர்கள்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஈதுல்பித்ர்,ஈதுல் அள்ஹா) ஆகிய இரு பெருநாள் தொழுகைகளில் கிராஅத் ஓதுவதற்கு முன் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர் களும்,இரண்டாம் ரக்அத்தில் கிராஅத் ஓதுவதற்கு முன் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிப்பவர்: அம்ர் இப்னு அவ்ஃப்ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மிதி.
சூராக்கள்
பெருநாள் தொழுகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காஃப் என்ற அத்தியாயத் தையும், கமர் என்ற அத்தியாயத்தையும் ஓதியிருக்கிறார்கள். சிலவேளை அஃலா என்ற அத்தியாயத்தையும், காஷயா என்ற அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூவாகித்ரளியல்லாஹு அன்ஹு ஆதாரம்: அஹமத், முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னு மாஜா.
''இரு பெருநாள் தொழுகைகளில் ''ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா'' என்ற அத்தியாயத்தையும், ''ஹல் அதாக்க ஹதீஸுல் காஷயா'' என்ற அத்தியா யத்தையும் ஓதுவார்கள்''. அறிவிப்பவர்:ஸமுரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அஹ்மத்,,தப்ரானி.
குத்பா உரை
தொழுகை முடிந்த பிறகே குத்பா உரை நிகழ்த்தவேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, உமர்ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் குத்பாவுக்கு முன்பே இரண்டு பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி,முஸ்லிம், திர்மிதி, நஸயீ.
குத்பா உரையை கேட்பது
ஜும்ஆ உரையைப் போன்று பெருநாள் குத்பா உரையையும் காது தாழ்த்திக் கேட்பது அவசியமாகும்.இன்று இதன் முக்கியத்துவம் புரியாது பலர் குத்பாவைக் கேட்காது எழுந்து சென்று விடுகின்றனர்.
கன்னிப்பெண்கள்,மாதவிடாய்ப் பெண்கள் உட்பட அனைவரும் வந்து இமாமின் குத்பா-பிரச்சார-உரைiயில் கலந்து கொள்ளவேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறியது பெருநாள் உரையைக் கேட்பதற்குத்தானே தவிர மைதானத்திற்கு வந்து பேசிக் கொண்டிருப்பதற்காக அல்ல.
15. தொழுமிடம் - முஸல்லா
பெருநாள் தொழுகையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஈத்காஹ்) திடலில் தொழுதுள்ளதால் பள்ளியில் தொழாமல் திடலில் தொழுவதே சிறப்பாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பெருநாள் தொழுகைக்காக) ''முஸல்லா'' என்னும் திடலுக்குப் புறப்படுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரே ஒரு தடவைதான் (மழை காரணமாக)பள்ளியில் தொழுதுள்ளார்கள்.
16. பெருநாளில் பிரார்த்தனை (துஆ)
பெருநாள் தொழுகையும், உரையும் முடிந்ததும் நாம் உடனே கலைந்து விடாமல் ஆண்களும்,மாதவிடாய்ப் பெண் உட்பட அனைத்துப் பெண்களும் அவரவருக்குரிய இடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யவேண்டும்.
பெருநாளில் (தொழும் திடலுக்கு நாங்கள் புறப்படவேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆ செய்வார்கள்.அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்துவத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா ஆதாரம்: புகாரி-971.
இந்த ஹதீஸில் பெருநாளைக்கு என்று ஒரு பரக்கத்தும், புனிதமும் இருப்பதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அந்த பாக்கியத்தை நாம் இழந்து விடக்கூடாது என்பதற்காக பெருநாள் உரை முடிந்ததும் நாம் பிரார்த்தனை (துஆ) செய்து கொள்ள வேண்டும்.
17. ஈத் பெருநாளும் ஜும்ஆவும் ஒன்றாக வந்தால்
ஈத் பெருநாளும் ஜும்ஆவும் ஒரேநாளில் ஒன்றாக வந்தால், ஈத் தொழுகையை நிறைவேற்றியவர் ஜும்ஆத் தொழுகையை தெழாமலிருக்கலாம். அல்லது இரண்டையும் தொழலாம்.
18. பெருநாளன்று வாழ்த்து தெரிவிப்பது
நான் அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு போன்ற நாயத் தோழர்களுடன் இருந்தபோது பெருநாள் தொழுகை முடிந்து திரும்பியதும் அவர்களில் ஒருவருக்கொருவர்,تقبل الله منا ومنك ''தகப்பலல்லாஹு மின்னா, வமின்க' என்று கூறிக்கொள்வார்கள். என முஹம்மது இப்னு ஸியாத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கிறார்கள். அஹ்மது இப்னு ஹன்பல் இந்த ஹதீஸின் இஸ்னாத் தரம் சிறந்தது எனக் கூறுகிறார்கள். (அல்ஜவ்ஹருந்நகிய்யி 3-320)
19. மார்க்கத்திற்கு முரணானவை நிகழாது காத்தல்
''பெருநாள் என்றாலே பொழுது போக்கும் நாள்! ஆரவாரமிக்க நாள்! உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கும் நாள்'' எனக் கருதிக் கொண்டு நம்மில் பலர் வேடிக்கை விளையாட்டுகளிலும்,கேளிக்கைகளிலும், திரைப்படங்களைப் பார்ப்பதிலும் பொழுதைக் கழிக்கின்றனர். ஆண்களும் பெண்களும் ஒன்றாகக் கலந்து பலநிகழ்சிகளில் பங்கேற்கின்றனர். மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத நிகழ்ச்சிகள், வைபவங்களை தவிர்த்து மாண்பார் துல்ஹஜ்ஜின் பேறுகள் அனைத்தையும் பெறுவதற்கும், அந்நாட்களில் அதிகமதிகமாக வணக்கங்களில் ஈடுபடுவதற்கும் வல்லான் அல்லாஹ் அருள் புரிவானாக!
''Jazaakallaahu khairan''
0 கருத்துரைகள்:
Post a Comment