Saturday, September 22, 2012

சர்வதேச அணுசக்தி ஏஜன்சி வருடாந்திர கூட்டத்தில் ஈரான்-இஸ்ரேல் மோதல்!

Iran, Israel clash at IAEA meeting
ஜெனீவா:சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின்(ஐ.ஏ.இ.ஏ) வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்ற ஈரான் – இஸ்ரேல் பிரதிநிதிகளுக்கு இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. மேற்காசியாவில் அணு ஆயுதத்தை தடைச்செய்ய சர்வதேச அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில்(என்.பி.டி) இஸ்ரேல் கையெழுத்திட வேண்டும் என்று ஈரான் பிரதிநிதி அலி அஸ்கர் சுல்தானி வலியுறுத்தினார். சுல்தானியின் கோரிக்கை இஸ்ரேல் பிரதிநிதிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
சுல்தானி மேலும் கூறுகையில்: “மேற்காசியா பிராந்தியத்தில் என்.பி.டியில் கையெழுத்திடாத ஒரே நாடு இஸ்ரேல் ஆகும். பெருமளவில் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள இஸ்ரேல் எழுப்பும் அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டுவராமல் அமைதியும், பாதுகாப்பும் ஏற்படாது” என்று சுல்தானி தெரிவித்தார்.

ஈரான் பிரதிநிதியின் பேச்சால் அதிருப்தியடைந்த இஸ்ரேல் பிரதிநிதி யஹூத் அஸுலே, அணு ஆயுத பரவலுக்கு ஈரானும், சிரியாவுமே உண்மையில் அச்சுறுத்தல் என்று குற்றம் சாட்டினார்.
அதேவேளையில், மேற்காசியாவை அணு ஆயுதம் இல்லாத பிராந்தியமாக மாற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் ஐ.ஏ.இ.ஏ ஏற்பாட்டில் பின்லாந்து நாட்டில் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் மாநாட்டில் பங்கேற்கமாட்டோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்ற இஸ்ரேல் அணுசக்தி கமிஷன் தலைவர் ஷோல் ஹோரெக் இதனை தெரிவித்தார். பிராந்தியத்தில் நிலைமைகள் சீராகும் வரை இத்தகைய நடவடிக்கைகளை அமல்படுத்த முடியாது என்று அவர் கூறினார்.
இஸ்ரேலின் பொறுப்பற்ற அணுகுமுறைதான் மேற்காசியாவின் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியது. மேற்காசியா பிராந்தியத்தில் அணு ஆயுதங்களை கைவசம் வைத்திருக்கும் ஒரே நாடான இஸ்ரேல், பின்லாந்தில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்காமல் இருப்பது மாநாட்டின் முக்கியத்துவத்தை குறைக்கும் என கருதப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza