இந்தியாவில் போதைபாக்கு சிகரெட், பீடி மற்றும் புகையிலை பொருட்களை இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களை பயமுறுத்த மத்திய அரசு சிகரெட் பாக்கெட்டுகளில் மனித மண்டை ஓடு அச்சிடுமாறு கூறியது. இப்படி பல்வேறு படங்கள், எச்சரிக்கை வாசகங்கள் மூலம் மிரட்டினாலும் புகைபிரியர்கள் அதை கண்டு கொள்ளவில்லை.
தொடர்ந்து புகை பிடித்துக் கொண்டுதான் உள்ளனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் ஏராளமான இளைஞர்களுக்கு புற்று நோய் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் பெரும்பாலோர் ரத்தம் மற்றும் நுரையீரல் புற்று நோயால் அவதிப்படுகிறார்கள். புற்றுநோயை தொடக்க நிலையிலே கண்டுபிடித்தால் அவற்றை எளிதாக குணப்படுத்த முடியும்.
இதற்கான விழிப்புணர்வை பள்ளி-கல்லூரிகளில் ஏற்படுத்த வேண்டும் என்கிறார் சென்னை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் டி.ராஜா. அவர் கூறியதாவது:-
புற்று நோய் கட்டிகளில் சாம்பிள் எடுத்து பயாப்சி பரிசோதனை செய்வது வழக்கம் ஆனால் தொடக்க நிலையிலேயே உடல் செல்களில் மரபணு (ஜீன்) பரிசோதனை மூலம் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கலாம். பெண்களிடம் சமீப காலமாக மார்பக புற்றுநோய், கருப்பை புற்று நோய் மிகவும் அதிக அளவில் உள்ளது.
இதற்கு வயதான காலத்தில் திருமணம், குழந்தைகளுக்கு சரிவர தாய்ப்பால் கொடுக்காதது? போன்றவையும் காரணம் ஆகும். புற்று நோய்க்கு சிகிச்சை செலவு அதிகம் என்பதால் ஏழைகளுக்கு பயன்படும் வகையில் அரசே ஏராளமான புற்று நோய் மருத்துவமனைகள் கட்ட வேண்டும். புற்று நோயாளிகளை அதிக அளவில் உருவாக்கி வரும் சிகரெட், பீடி, புகையிலைப் பொருட்களை அரசு தடை செய்ய வேண்டும்.
பள்ளி,கல்லூரி, பெரிய நிறுவனங்களில் ஆண்டில் ஒரு தடவை அனைவருக்கும் புற்று நோய் உள்ளதா? என்று பரிசோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் தொடக்க நிலையிலேயே புற்று நோயை கண்டறிந்து அதற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து குணப்படுத்தி விடலாம் என்கிறார் புற்று நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.ராஜா.
மார்பக புற்றுநோய்...........
பிரான்ஸ் நாட்டின் லியான் என்ற உலக புற்றுநோய் ஆராய்ச்சி கழக ஆய்வின்படி, இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரிக்கும். இதன்படி, வரும் 2015 முதல் ஆண்டுக்கு 2.50 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது என்கின்றனர். அதே போல் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
காரணம் என்ன:
மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றி திருமணம் செய்வதை தவிர்ப்பது. குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்துவது. தாய்ப்பால் கொடுப்பதை தவிர்ப்பது. கால இடைவெளியின்றி குழந்தை பெற்றுக் கொள்வது ஆகியவை பெண்களிடம் ஹார்மோன் மாறுதலை ஏற்படுத்துகிறது. இதுவும் மார்பக புற்றுநோய்க்கு காரணமாகிறது.
தாய் மற்றும் உறவினர்களுக்கு இருந்தாலும் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. மாத விடாய் சுகா தாரமின்மை, தரமற்ற நாப்கின்களைப் பயன் படுத்துவது, புற்றுநோய் வைரஸ் தொற்று உள்ளிட்ட காரணங்களால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. ஆனால், இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல், பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
குறிப்பாக கிராமங்களில் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய அறியாமையால் கருப்பை வாய் புற்றுநோய் வருகிறது. நகர்ப்புறங்களில் நாகரிக மோகத்தில் மார்பக புற்றுநோய் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 60 சதவீதம் பேர் நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வருவதால், பூரண குணமடைவது கேள்விக்குறியாகிறது. நடுத்தர மற்றும் ஏழைகள் பலர் மருத்துவ சிகிச்சை பெற வசதியின்றி, உயிரை இழக்கிறார்கள்.
போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். மார்பக புற்றுநோயை சுய பரிசோதனை, மேமோகிராபி சோதனைகள் மூலம் குறைந்த செலவில், எளிதில் கண்டறியலாம். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், மார்பகத்தை அகற்றாமலே சிகிச்சை பெறலாம். நாற்பது வயதைக் கடந்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுய பரிசோதனை அல்லது மேமோ கிராபி சோதனை செய்து கொள்வது அவசியம் .
மார்பக காம்பை சுற்றி நாள்பட்ட ஆறாத புண்கள். மார்பகத்தில் ஏதேனும் மாற்றங்கள். காம்பில் நீர் அல்லது ரத்தக் கசிவு. மார்பக காம்பு உள்நோக்கி இருத்தல். மார்பக பகுதியில் சதைகள் கடினமாவது ஆகியவை மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள். துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல், ரத்தக் கசிவு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் கர்ப்பப் பை வாய் புற்றுநோய் சோதனை செய்து கொள்வது அவசியம்.
புகை வேண்டாமே........
புற்றுநோய் மனித இனத்தை ஆட்டிப் படைக்கும் நோய். ஆண்டு தோறும் புற்று நோயால் 70 லட்சம் பேர் இறக்கின்றனர். புற்றுநோய் சில வைரஸ்களால், வேதிப் பொருட்களால் அல்லது கதிரியக்கத்தால் உண்டாகலாம். புற்றுநோயை எவ்வளவு விரைவாகக் கண்டுபிடிக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு எளிதாகக் குணமாக்கலாம்.
புற்றுநோய் வருவதைத் தவிர்க்க புகை பிடிப்பதைத் தடுக்க வேண்டும் என்று எடுத்துச் சொன்னால் உடனே எதிர் கேள்வி கிளம்பிவிடும். புகை பிடிப்பவர்களுக்கெல்லாம் புற்றுநோய் வருகிறதா? புகைக்காதவர்கள் புற்றுநோயால் அவதிப்படுவதில்லையா? இப்படி கேட்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர் பலர்.
புகைப்பிடிப்பவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகமாகக் காணப்படுவது நன்கு ஆய்ந்தறிந்து சொல்லப்பட்ட ஒன்று. சிலருக்கு வருவதில்லையே எனக் காரணம் காட்டி, புகை பிடித்து வம்பை வலிய விலைக்கு வாங்குவது எவ்வகையில் நியாயம்ப மேலும், புகைப்பதால் மட்டுமே புற்று நோய் வருமென்று யாராவது சொன்னார்களா? வேறு பல காரணங்களாலும் புற்று நோய் தோன்றலாம்.
புகையிலையை வாயில் அடக்கிக் கொள்வது. போதைபாக்குப் போடுவது சில வகைப்பூஞ்சைகள் தாக்கிய சொத்தைக் கடலை போன்ற உணவை உட்கொள்வது, பூச்சிக்கொல்லி மருந்துகள் கொண்ட மற்றும் தீய்ந்த உணவுப்பொருட்களைச் சாப்பிடுவது போன்றவற்றாலும் புற்று நோய் ஏற்பட முடியும். இத்தகைய காரணங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது என்று தெரிந்த பிறகும், இவற்றைக் கைவிடாமல் இருப்பது அறிவுடைமை அல்லவே.
நாம் வாழும் இன்றைய உலகம் தூய்மையானதல்ல. மனிதன் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதற்கு ஏற்ப பல்வேறு நச்சுப் பொருட்கள் உற்பத்தி செய்து, பயன்படுத்தி, இவ்வுலகை மாசுறச் செய்கிறான். நாம் சுவாசிக்கும் காற்று தூய்மையானது அல்ல. நாம் அருந்தும் நீரும் அப்படியே.
பூச்சுக் கொல்லி மருந்துகளையும், செயற்கை உரங்களையும் வரைமுறையின்றிப் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியைப் பெருக்கி விட்டோமே தவிர, அதனால் விளைந்த கேடுகளை பலர் இன்றும் அறியவில்லை. நாம் பயன்படுத்தும் அனைத்து உணவுப் பொருட்களிலும் இந்நச்சு இரண்டறக் கலந்திருப்பது மிகவும் கேடு விளைவிக்கக்கூடிய நிகழ்வு.
காய்கறிகளை வாங்கிக் என்ன தான் நீரில் அலசிச் சமைத்தாலும் அவற்றின் உள்ளே உள்ள பூச்சி மருந்துகள் அப்படியேதான் இருக்கின்றன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புற்று நோயைத் தோற்றுவிக்க வல்ல, வேதிப் பொருட்கள் பலவற்றை நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கிறோம். அவை மூலப்பொருள் வடிவத்தில் இருக்கும்போது அவற்றால் அதிக பாதிப்பு இல்லை.
ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலையில் மூலப் பொருட்கள் மாற்றம் பெற்று புற்றுத் தோற்றிகள் ஆகின்றன. இந்தப் புற்றுத் தோற்றிகள் அடுத்து நமது செல்களிலுள்ள மரபுப் பொருளான டி.என்.ஏ.வைத் தாக்குகின்றன. இந்த டி.என்.ஏ. புற்றுத் தோற்றிகள் இடையே விளையும் இடைச்செயல் சாதாரணச் செல்லைப் புற்று நோய் செல்லாக மாற்றுகிறது.
இதனால் இந்தச் செல் தறிகெட்டுச் செயல்பட்டு பல்கிப் பெருகி புற்று நோய்க் கட்டியாக விசுவரூபம் எடுக்கிறது. இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏதோவொரு வகையில் புற்று நோய் வருவதற்கான காரணங்களைத் தம்மையறி யாமல் உட் கொண்டு வருகிறார்கள்.
உணவு முறை......
வைட்டமின்-சி, வைட்டமின்- இ, ரெடினாய்டுகள், கரோட்டினாய்டுகள், போன்ற இவ்வேதிப் பொருட்கள் காரட், பீட்ரூட், ஆரஞ்சு, தக்காளி போன்ற காய்கனி கிழங்குகளில் நிறைந்திருக்கின்றன. எனவே இத்தகைய காய், கனி, கிழங்குகளை வேக வைக்காமல், பச்சையாக உட்கொள்வது புற்றுநோய் வராமல் தடுக்கும் முயற்சியில் முதற்படியாக அமையும்.
1. ஊட்டம் நிறைந்த உணவையே சாப்பிடுங்கள்.
2. இ, சி-வைட்டமின் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.
3. குறிப்பிட்ட சில உணவுகளையே பிடிக்கிறது என்பதற்காக அடிக்கடி சாப்பிடுவதை தவிருங்கள்.
4. நார்ப்பொருள் நிறைந்த நிறைய காய்கறிகள், பழங்களை உணவைச் சாப்பிடுங்கள்.
5. அதிக சூடான உணவு சாப்பிடாதீர்கள். மிதமான சூடுபோதும்.
6.எப்போதும் தீய்ந்த உணவைச் சாப்பிடாதீர்கள்.
7. பூஞ்சைகள் தாக்கிய பொருட்களை உட்கொள்ளவேக் கூடாது.
8. பூச்சி மருந்து கொண்ட உணவை சாப்பிடாதீர்கள்.
9. மருந்துகளை நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிடாதீர்கள்.
10. மது, புகையிலையை கண்டிப்பாகத விருங்கள்.
இவற்றை எல்லாம் வாழ்வில் கடைப்பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் வராது என்பது நிஜம் என்கிறார் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.ராஜா.
thanks to: maalaimalar
thanks to: maalaimalar
0 கருத்துரைகள்:
Post a Comment