Friday, September 28, 2012

மேற்கத்தியர்கள் சர்வதேச அளவில் அணு ஆயுத பீதியை உருவாக்குகின்றனர்- அஹ்மத் நஜாத்!

Amadinejad
ஐ.நா:மேற்கத்திய நாடுகள் சர்வதேச அளவில் அணு ஆயுத பீதியை உருவாக்குவதாக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறினார். ஆயுதக் கடத்தல், பேரழிவு ஆயுதங்களின் பீதி ஆகியவற்றை பரப்புரைச் செய்வதே மேற்கத்திய நாடுகளின் முக்கிய பணி என்று அவர் தெரிவித்தார்.
ஐ.நா பொது அவையில் உரை நிகழ்த்துகையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளை ஒரு பிடி பிடித்தார் நஜாத். நேற்று முன்தினம்(புதன் கிழமை) ஐ.நா பொது அவையில் உரை நிகழ்த்திய முக்கிய நபர்களில் நஜாதும் ஒருவர் ஆவார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் நஜாத் கூறியது: “15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஐ.நாவின் அதிகாரங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது. எல்லா உறுப்பு நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் அவையில் சம உரிமை வேண்டும். சில நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பாரபட்சமான அதிகாரங்கள் தாம் உலகில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணம். பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள இரண்டு நாடுகள் அவர்களின் விருப்பத்தை பிற நாடுகளின் மீது திணிக்கின்றனர். உலகில் நடக்கும் அனைத்துப் பிரச்சனைகளின் பின்னணியிலும் ஒரு பகுதியில் இவ்விரண்டு நாடுகளும் உள்ளன. ஆகையால் பாதுகாப்பு கவுன்சிலால் அதன் பொறுப்பை முழுமையாக நிறைவேற்ற இயலவில்லை என்று நஜாத் கூறினார்.
பொது அவையில் அஹ்மத் நஜாதின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தனர். ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை என்ன விலைக்கொடுத்தேனும் தடுப்போம் என்று கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நாவில் ஆற்றிய உரையில் ஒபாமா தெரிவித்திருந்தார். அதேவேளையில் சிரியாவில் வெளிநாட்டு தலையீட்டை எதிர்ப்பதாக எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸி கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza