Monday, September 24, 2012

மக்கள் விரோத கொள்கைகளை பிரதமர் வெட்கமில்லாமல் நியாயப்படுத்துகிறார்: இ.அபூபக்கர்!

இ.அபூபக்கர்
புதுடெல்லி:மக்கள் விரோத கொள்கை முடிவுகளை வெட்கமில்லாமல் பிரதமர் மன்மோகன்சிங் நியாயப்படுத்துவதாகவும், நொறுங்கிப் போன நம்பிக்கையை மீட்டெடுக்க அவர் முயல்வதாகவும் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின்(எஸ்.டி.பி.ஐ) தேசிய தலைவர் இ.அபூபக்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுத்தொடர்பாக இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது:
“டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு(FDI) ஆகியவற்றை நியாயப்படுத்த வீணான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் மன்மோகன்சிங்.

நாட்டின் பொருளாதார நிலையை இன்றைய சூழலுக்கு கொண்டுவந்ததற்கான பொறுப்பு கடந்த எட்டு ஆண்டுகளாக நாட்டை ஆளும் ஐ.மு அரசையே சாரும். பிரதமர் என்ற நிலையில் மன்மோகன்சிங்கின் செயல்பாடு பரிதாபகரமாக உள்ளது. நாடு சந்திக்கும் பிரச்சனைகளில் தனக்கு ஏதும் பங்கில்லை என்பது போல் பிரதமரின் அறிக்கை அமைந்துள்ளது.
ஊழல் மூலம் பணக்காரர்களாக மாறிய தனது அமைச்சரவை சகாக்களுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக ஒரு சிறு விரலை கூட அசைக்காதவர் தாம் பிரதமர் மன்மோகன்சிங். நம்பிக்கைதான் முக்கியம். 2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு போன்றவற்றால் ஐ.மு அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது. நம்பிக்கையை மீட்டெடுக்கவே மன்மோகன்சிங் முயற்சிக்கிறார்.
இந்தியா விற்பனைக்கு உள்ளதாக மன்மோகன்சிங் கூறியிருக்கிறார். உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்கமூட்டுவதற்கு பதிலாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது. தங்கம் தற்போது சாதாரண மக்களுக்கு சுமையாகவும், பணக்காரர்களுக்கு முதலீடாகவும் மாறிவிட்டது. தங்கத்தின் மீதான முதலீட்டை அரசு கவர்ச்சியற்றதாக மாற்றினால் ரூபாயின் மதிப்பு உயர்ந்து, நாட்டி பொருளாதார நிலை மேம்படும்.
மக்களை முட்டாள்களாக்குவதே காங்கிரஸின் பாணியாகும். எதனையும் வாங்கவும், நாட்டையே விற்கவும் தங்களால் முடியும் என்று அவர்கள் நம்புகின்றார்கள். நாட்டின் சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் தனியார் நிறுவனங்கள் ஆகியோரின் விருப்பங்களை மன்மோகன்சிங் பாதுகாக்கிறார். அரசு மீது எவ்வித கட்டுப்பாடும் இல்லாத, முடிவு எடுக்க தெரியாத, பலகீனமான பிரதமர் என்ற பெயரை மன்மோகன்சிங் பெற்றுள்ளார்.” இவ்வாறு இ.அபூபக்கர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza