அத்தியாயம் 2
“மொசாத்தின் நடவடிக்கைகளில் அரசியல் குறுக்கிடாமல் எங்களை எங்களது போக்கில் விடுங்கள். மொசாத்தால், அதிரடியாக ஒரு ஒப்பரேஷனை நிச்சயம் செய்ய முடியும். கடத்தப்பட்ட விமானத்திலிருந்த பணயக் கைதிகளையும் மீட்க முடியும்.” மொசாத்தின் தலைவர் இவ்வாறு கூறிவிட, இறுதியில் இஸ்ரேலியப் பிரதமர் அந்த உறுதிமொழியைக் கொடுத்தார்.
“இந்த அதிரடி நடவடிக்கையில் எந்த அரசியல் தலையீடும் இருக்காது. மொசாத் சுதந்திரமாகச் செயற்படலாம்”
மொசாத் களத்தில் இறங்கியது!
இதில் மொசாத்துக்கு இருந்த மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், கடத்தப்பட்ட விமானம் தரையிறங்கியிருக்கும் இடம்!
அது உகண்டா.
அதில் என்ன சிக்கல்? 1972ம் ஆண்டே உகண்டா அரசு இஸ்ரேலுடன் இருந்த ராஜாங்க உறவுகளைத் துண்டித்து விட்டிருந்தது. அப்போதே உகண்டாவிலிருந்த இயங்கிக் கொண்டிருந்த இஸ்ரேலியத் தூதரகம் மூடப்பட்டு, அங்கிருந்த அனைவரும் உகண்டாவை விட்டு வெளியே அனுப்பப்பட்டிருந்தார்கள்.
அதற்குப் பின்னர் எந்தவொரு இஸ்ரேலியரும் உகண்டாவுக்குள் நுழைவது என்பது நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத காரியமாகப் போயிருந்தது.
எனவே இந்த விமானம் உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் இறக்கப்பட்டபோது, உகண்டா நாட்டிலேயே மொசாத்தின் ஏஜன்ட்கள் யாரும் இருக்கவில்லை. நிலைமை கொஞ்சம் கஷ்டமானதுதான் என்பது மொசாத்தின் தலைவருக்குப் புரிந்தது.
இது ஒரு கடினமான, அதே நேரத்தில் பல உயிர்களுடன் சம்மந்தப்பட்ட ஒப்பரேஷன். இதைச் சரியாகவும் துல்லியமாகவும் நடத்த வேண்டுமானால், அதற்கு இந்த ஒப்பரேஷனை மொசாத்தில் பணிபுரியும் மிகத் திறமைசாலியான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மொசாத்தின் தலைவர் யோசித்தபோது, அவரது நினைவில் முதலில் தோன்றிய பெயர் டேவிட் கிம்சே!
மொசாத்தின் தலைவர் டேவிட் கிம்சேயை உடனடியாக அழைத்து இந்த ஒப்பரேஷன் பொறுப்பைக் கொடுத்தார். இந்த ஒப்பரேஷனை டேவிட் விரும்பிய வகையில் மேற்கொள்ளப் பூரண சுதந்திரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டது.
டேவிட் யோசித்தார்.
ஒப்பரேஷனுக்காக மொசாத்தின் உளவாளிகளை உகண்டாவுக்கு உள்ளே அனுப்ப முடியாது. உகண்டாவுக்கு அருகில் உள்ள ஏதாவது நாடு ஒன்றில் வைத்துத்தான் இந்த ஒப்பரேஷன் செயற்பட வேண்டும். அதற்கு அந்த நாடு அல்லது அந்த நாட்டின் உளவுத்துறை சம்மதிக்க வேண்டும். மொசாத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.
அருகில் உள்ள எந்த நாடு கைகொடுக்கும்?
உகண்டாவுக்கு அருகில் உள்ள ஒவ்வொரு நாடு பற்றியும் டேவிட்டால் அலசப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும் சாதகமான அம்சங்கள் என்ன? பாதகமான அம்சங்கள் என்ன? அந்த நாட்டிலிருந்து உகண்டா எவ்வளவு தூரம்? அந்த நாட்டிலிருந்து உகண்டாவுக்குள் நுழைவதென்றால் எப்படி நுழையலாம் என்று பல விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன.
இறுதியில் டேவிட் தேர்ந்தெடுத்த நாடு கென்யா.
இந்தத் தகவல் மொசாத்தின் தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டது. மேல்மட்ட அரசியல் தொடர்புகள் மூலம் கென்யாவின் உளவுத்துறையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுக்குமாறு அவரைக் கோரினார் டேவிட்.
மொசாத்தின் தலைவருக்கு கென்யாவின் உளவுத்துறைத் தலைமையுடன் நேரடிப் பரிச்சயம் இருந்தது. மொசாத்தின் தலைமை உடனடியாக கென்யா நாட்டு உளவுத்துறையின் தலைவரைத் தொடர்பு கொள்ள, கென்ய நாட்டு உளவுத்துறை மொசாத்துக்கு உதவுவதற்கு சம்மதித்தது.
அடுத்த கட்டமாக, மொசாத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளான ஆறு உளவாளிகள், கென்யத் தலைநகரான நைரோபியில் போய் இறங்கினார்கள்.
விமானத்தில் தீவிரவாத அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கும் அதிரடி ஒப்பரேஷன் ஒன்றை நடாத்த மொசாத் தனது திறமைசாலிகளான 6 உளவாளிகளை அனுப்பி வைக்கிறது என்ற விபரம் கென்யாவின் உளவுத்துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு கென்யாவில் தேவையானவற்றைச் செய்து கொடுக்குமாறு ஒரு கோரிக்கையும் இஸ்ரேலில் இருந்து கென்யாவுக்கு ராஜதந்திர மட்டத்தில் போய்ச் சேர்ந்தது.
உளவாளிகள் தங்கவைக்கப்பட்ட வீடு
ஆறு மொசாத் உளவாளிகளும் கென்யாவின் நைரோபி நகரை அடைந்தவுடன் அவர்களை சேஃப் ஹவுஸ் என உளவு வட்டாரங்களில் குறிப்பிடப்படும் பாதுகாப்பான வீடுகளில் ஒன்றில் தங்கவைத்தார்கள் கென்ய நாட்டு உளவுத்துறை அதிகாரிகள்.
பொதுவாகவே எல்லா நாட்டு உளவுத்துறைகளும் இப்படியான சேஃப் ஹவுஸ்களை வைத்து இயக்குவது வழக்கம். வெளிப்படையாக மக்கள் குடியிருப்புகள் போலவே தோற்றமளிக்கும் இந்த வீடுகள் உளவுத்துறையினரின் பிரத்தியேக பாவனைகளுக்கானவை.
நைரோபியில் இப்படியான சுமார் 20 வீடுகளை கென்யாவின் உளவுத்துறை வைத்திருந்தது. மக்கள் குடியிருப்புக்களில் கலந்திருந்த இந்த வீடுகள் தகவல் தொடர்புக்கான பாதுகாப்பான தொலைபேசி இணைப்புக்ளைக் கொண்ட வீடுகள். ஆனால், அந்த தொலைபேசி இணைப்புக்கள் கென்யாவின் தொலைத் தொடர்பு இலாகாவினால் நிர்வகிக்கப்படும் இணைப்புக்கள்.
சுருக்கமாகச் சொன்னால், அங்கிருந்து மேற்கொள்ளப்படும் எந்தத் தொலைத் தொடர்பும் கென்ய உளவுத்துறை அறியாமல் வெளியே செல்ல முடியாது!
முதலில் அனுப்பப்பட்ட ஆறு மொசாத் உளவாளிகளில் இரண்டுபேர் உளவாளிகள் மாத்திரமல்ல, அவர்கள் டெக்னீஷின்கள்கூட. அவர்கள் இதுபோன்ற ரகசிய ஒப்பரேஷன்கள் வெளிநாடுகளில் மொசாத்தால் நடாத்தப்படும்போது வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பான தொலைத்தொடர்பு சனல் ஒன்றை அமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
அவர்கள் மூலமாக, நைரோபியில் இருந்த வீட்டுக்கும், இஸ்ரேலின் டெல்அவிவ் நகரத்துக்கும் நேரடியாக சட்டலைட் தொலைத் தொடர்பு இணைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
இந்த இணைப்பு கென்யாவின் தொலைத்தொடர்பு இலாகாவுக்கு ஊடாகச் செல்லாத இணைப்பு என்பதலால், இவர்களது உரையாடல்களை கென்யாவில் யாருமே கேட்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அதன்பின் இந்தப் பாதுகாப்பான வீட்டிலிருந்த உளவாளிகளுக்கு உத்தரவுகள் மொசாத்தின் தலைமையகத்தில் இருந்து வரத்தொடங்கின.
அதிரடி ஒப்பரேஷனுக்காக இப்படி உகண்டாவுக்கு வெளியே கென்யாவில் முன்னேற்பாடுகள் ஒருபுறமாக நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறத்தில் உகண்டாவில் என்ன நடந்துகொண்டிருந்தது?
என்டபே விமான நிலையத்தில்…
எயார் பிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்து கடத்தப்பட்ட இஸ்ரேலியப் பயணிகள், கடத்தல்காரர்களால் உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் கடும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு இருபத்து நான்கு மணிநேரமும் காவல் இருந்தது.
அதிரடித் தாக்குதல் நடாத்தப்படத் திட்டமிடப்படும் இந்த என்டபே விமான நிலையம் உகண்டாவின் தலைநகரில் இருந்தாலும், அளவில் சிறியது. அதனூடாக நடைபெறும் விமானப் போக்குவரத்தும் மிக மிகக் குறைவு. எனவே பயணிகள் நடமாட்டம் அந்த விமான நிலையக் கட்டடத்தில் பெரிதாக இருப்பதில்லை.
இதனால் விமான நிலையத்தின் ஒரு பகுதியை முழுமையாகவே கடத்தல்காரர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து, பணயக்கைதிகளை அங்கே வைத்திருந்தார்கள்.
உகண்டா நாட்டின் அன்றைய தலைவர் இடி அமீன் அரசியல் ரீதியாக இஸ்ரேலுக்கு எதிரான நிலை எடுத்திருந்த காலப்பகுதி அது. இதனால், கடத்தல்காரர்களுக்கு என்டபே விமான நிலையத்தில் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.
வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பு ஒன்று மற்றொரு நாட்டு விமானத்தைப் பயணிகளுடன் கடத்திக் கொண்டு வந்து மூன்றாவது நாடு ஒன்றில் வைத்திருக்கின்றது. இப்படியான நிலையில் விமானம் இறக்கப்பட்டிருக்கும் மூன்றாவது நாடு வழமையாகக் கடத்தல்காரர்கள்மீது ஒரு கண் வைத்திருக்கும். அவர்கள்மீது தாக்குதல் நடாத்த முடியுமா? பணயக்கைதிகளைக் காப்பாற்ற முடியுமா? என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கும்.
ஆனால் உகண்டாவில் இது தலைககீழாக இருந்தது.
கடத்தல்காரர்களும், உகண்டாவின் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நடந்து கொண்டார்கள். அதற்கு ஒருபடி மேலேபோய், கடத்தல்காரர்கள் ஓய்வு எடுக்கும்போது உகண்டாவின் பாதுகாப்புப்படை அதிகாரிகளால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்ட லோக்கல் ஆட்களே பணயக் கைதிகளை காவல்காத்தார்கள்.
உகண்டா அரசே கிட்டத்தட்ட கடத்தல்காரர்களின் பக்கத்தில் இருந்து செயற்படுவது போன்ற தோற்றம் ஏற்பட்டிருந்தது.
அங்கிருந்த யாருக்கும், பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியப் பணயக்கைதிகள் உட்பட, இவர்களை விடுவிக்க மொசாத் அதிரடி நடவடிக்கை ஒன்றைத் திட்டமிடுகின்றது என்ற விஷயம் தெரியாது! இதுதான் அங்கிருந்த நிலை.
உகண்டாவில் நிலைமை அப்படியிருக்க இஸ்ரேலில் மொசாத்தின் தலைமைச் செயலகத்தில் என்ன நடைபெற்றுக்கொண்டிருந்தது?
மொசாத்தின் திட்டம்
மொசாத்தின் அதிரடி மீட்பு நடவடிக்கையை திட்டமிட்டுக் கொண்டிருந்த டேவிட் கிம்சே ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார். என்னதான் கென்யா நாட்டின் முழுமையான ஒத்துழைப்பு இந்த விஷயத்தில் கிடைத்திருந்தாலும், அதிரடி மீட்பு நடவடிக்கைகளை முற்று முழுதாக கென்யா நாட்டிலிருந்து நடத்துவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.
இதற்கும் ஒரு காரணம் இருந்தது.
இரு நாடுகளுக்கிடையிலான ராஜாங்க உறவு என்ற ரீதியில் கென்யா இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு கொடுத்தாலும், உள்மனதில் அவர்களுக்கும் இஸ்ரேல்மீது கோபம் இருக்கலாம். அதுவும் தங்களுக்கு அருகிலுள்ள நாடு (உகண்டா) ஒன்றில் இஸ்ரேலிய உளவுத்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளப் போகின்றது என்பதை கென்யா எந்தளவுக்கு விரும்பும் என்று ஊகிப்பது கஷ்டம்.
யார் கண்டது, சில வேளைகளில் கவிழ்த்து விட்டாலும் விடலாம்.
இது பணயக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்களின் உயிர் சம்மந்தப்பட்ட விஷயம் என்பது மாத்திரமல்ல. இப்படியொரு ஒப்பரேஷன் தோல்வியில் முடிந்தால் அது இஸ்ரேலுக்கு ஏற்படக்கூடிய கடும் அவமானமாகவும் இருக்கும்.
இதனால் இந்த அதிரடித் தாக்குதல் மீட்பு எப்படி நடைபெறப்போகின்றது என்ற விபரங்கள் யாருக்கும் தெரியாமல் – (கென்யா உட்பட) – இருக்கவேண்டியது அவசியம் என்று டேவிட் கிம்சீ முடிவு செய்திருந்தார்.
கொமாண்டோக்களை அனுப்ப வேண்டும்!
ஆனால் சிக்கல் என்னவென்றால், பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருக்கும் இடம் இருப்பது ஆபிரிக்காக் கண்டத்தில். இந்த அதிரடித் தாக்குதலுக்காகக் கொமாண்டோக்களை இஸ்ரேலில் இருந்து விமானம் மூலமாகக் கொண்டுபோய் ஆபிரிக்காவில் இறக்க வேண்டும்.
இஸ்ரேலில் இருந்து அதிரடித் தாக்குதல் ஒன்றை நடாத்த கொமாண்டோக்களை விமானமூலம் கொண்டு சென்றாலும், உகண்டாவுக்கு அருகிலுள்ள ஏதாவது ஒரு நாட்டு விமான நிலையம் ஒன்றில் வைத்து எரிபொருள் நிரப்பப்படவேண்டும்.
அந்த நாட்களில் இஸ்ரேலில் இருந்து ஆபிரிக்கா சென்று, மீண்டும் இஸ்ரேலுக்கு திரும்பிவருமளவுக்கு எரிபொருளைக் கொண்டு செல்லக்கூடிய எந்தவொரு விமானமும் இஸ்ரேலிடம் இருந்ததில்லை. தற்போது இருப்பதுபோல விமானத்துக்கு வானில் வைத்து எரிபொருள் நிரப்பும் வசதிகளும் அப்போது இருக்கவில்லை.
இஸ்ரேலுக்கு ஆபிரிக்கக் கண்டத்தில் அந்த நாட்களில் இருந்த அரசியல் உறவுகள் காரணமாக இஸ்ரேலுக்கு அந்தப் பிராந்தியத்தில் உதவக்கூடிய நாடுகள் அதிகமில்லை.
வேறு வழியில்லாமல் இதற்கும் கென்யாவிடம்தான் போகவேண்டும் என்ற நிலை.
இஸ்ரேலிய தந்திரம்
இந்த இடத்தில் இஸ்ரேல் ஒரு சிறிய தந்திரம் செய்ய முயன்றது. ஏற்கனவே உளவுத்துறையான மொசாத் மூலமாக கென்யாவில் இந்த அதிரடி நடவடிக்கைக்காக சில முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, அதற்கும் இதற்கும் சம்மந்தமில்லை… இது வெறும் சிவில் விமான விவகாரம் என்று காட்டி கென்யாவிடம் அனுமதி வாங்க முயன்றது இஸ்ரேல்.
இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு மூலம் கென்யாவின் வெளிவிவகார அலுவலகத்தில் தமது விமானம் ஒன்றுக்கு நைரோபி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று கேட்பதாக முடிவு செய்யப்பட்டது. சும்மா விமானம் ஒன்றுக்கு எரிபொருள் நிரப்பவேண்டும் என்பதைத்தவிர, வேறு எந்த விபரமும் சொல்வதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இப்படியான கோரிக்கை கென்யா நாட்டு வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் வைக்கப்பட்டபோது, அவர்கள் எரிபொருள் நிரப்பப்படவேண்டிய குறிப்பிட்ட இந்த விமானம் பற்றிய மேலதிக விபரங்களை கேட்கத் தொடங்கினார்கள்.
என்ன வகை விமானம் அது? விமானத்தில் என்ன இருக்கிறது? விமானம் கென்யாவில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு எங்கே செல்லப் போகின்றது? இப்படியான பல கேள்விகள் வந்து விழுந்தன.
இதற்கெல்லாம் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சிடம் பதில் இல்லை.
“இந்த விபரங்களைக் கூறினால்தான் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கமுடியும்” என்று கென்ய வெளிவிவகார அமைச்சுக் கூறிவிட, இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு மொசாத்தைத் தொடர்பு கொண்டு, அடுத்து என்ன செய்வது என்று கேட்டது.
விஷயம் என்னவென்றால், தீவிரவாதிகள் விமானக் கடத்தல் ஒன்றின்மூலம் இஸ்ரேலியப் பணயக்கைதிகளை உகண்டாவில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் என்ற செய்திதான் அப்போது உலகெங்கும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்தது. இது கென்யாவுக்கும் நன்றாகவே தெரியும்.
அத்துடன் இஸ்ரேலிய உளவுத்துறை அதற்குள் அதிரடியாக ஏதோ செய்யப்போகின்றது என்ற விபரமும், கென்யாவுக்கு மேலதிகமாகத் தெரியும்.
அப்படியான சூழ்நிலையில் இஸ்ரேலிய விமானம் ஒன்று கென்யாவில் எரிபொருள் நிரப்ப அனுமதி கேட்கின்றதென்றால், அது நிச்சயம் இந்தப் பணயக் கைதிகளுடன் சம்மந்தமாக ஏதோ ரகசியக் ஒரு காரியம் என்பதை கென்யா ஊகித்திருந்தது. இதனால் என்ன விஷயம் என்று சரியாகத் தெரியாமல் தமது நாட்டு விமான நிலையத்தை இதற்கு உபயோகிப்பதற்கு விட கென்யா விரும்பவில்லை.
டேவிட் கிம்சீ மொசாத்தின் தலைவருடன் கலந்து ஆலோசித்தார்.
முடிவில் மொசாத்தின் மற்றொரு திட்டம் உருவாகியது.
இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....
0 கருத்துரைகள்:
Post a Comment