புதுடெல்லி:தமிழகத்தை வளப்படுத்தும் சேதுசமுத்திர கால்வாய் திட்டம் தொடர்பாக சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே.பச்சோரியின் அறிக்கை மீதான தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மேலும் 6 வார கால அவகாசம் அளித்துள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனக்கூறி சிலர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 2007-ம் ஆண்டில் சேது சமுத்திரத் திட்டத்துக்கு தடை விதிக்க மறுத்தது.
அதனையடுத்து, நாட்டு மக்கள் மீதோ, தேச முன்னேற்றத்தின் மீதோ எவ்வித அக்கறையும் இல்லாமல் தமது பாசிச ஹிந்துத்துவா அஜண்டாவை செயல்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்ட சங்க்பரிவார்கள் சேது சமுத்திர கால்வாய் அமைக்க திட்டமிட்டிருக்கும் இடத்தில் ராமர் பாலம் இருந்தது என்ற கற்பனைக் கதையை கட்டவிழ்த்துவிட்டனர். இவர்களின் தூண்டுதலின் பெயரால் அரசியல் கோமாளியாக இருந்து சங்க்பரிவார கைக்கூலியாக மாறிப்போன சுப்ரமணிய சுவாமியும், தமிழகத்தின் முதல்வரும் ‘புரட்சி?’ தலைவியுமான ஜெயலலிதாவும் “சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் ஆறாவது வழித்தடத்தில் ‘ராமர் பாலம்’ இருப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர். அதனால் அப்பகுதியை புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தல் தனித்தனியாக 2007-ல் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “மாற்று வழியில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்புள்ளதா என்றும் இத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுமா என்பதைக் கண்டறியவும் நோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே. பச்சோரி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைக்க 2008-ல் உத்தரவிட்டது.
நான்கு ஆண்டுகள் ஆய்வு செய்த பச்சௌரி குழு, கடந்த ஜூலை மாதம் 2-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. அதன் 37 பக்க அறிக்கையில், “மாற்று வழியில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவது பொருளாதார, சுற்றுச்சூழல் ரீதியாக சாத்தியமில்லை” என்று கூறப்பட்டிருந்தது. அதையடுத்து, பச்சோரி குழு அறிக்கை மீது முடிவு செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய இரண்டு மாத கெடு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல். தட்டூ, சந்திரமௌலி குமார் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சோலிசிட்டர் ஜெனரல் ரோஹிங்டன் நாரிமன், “நிபுணர் குழு அறிக்கையை மத்திய அமைச்சரவை இன்னும் பரிசீலித்து முடிவு செய்யவில்லை. ஆகையால் பதிலைத் தாக்கல் செய்ய 8 வார அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அதை நிராகரித்த நீதிபதிகள், “ஆறு வாரங்களுக்குள் மத்திய அரசு தனது நிலையைத் தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment