கொழும்பு:இலங்கையின் வடமேற்கே மன்னார் முஸலி பகுதியில் உள்ள தீவில் வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தின் பின்னணியில் இலங்கை கடற்படையினர் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இலங்கையின் வடமேற்கே மன்னார் முஸலி பகுதியில் மறிச்சுக்கட்டி மரைக்காயர் தீவில் வசித்து வரும் முஸ்லிம் மக்களின் குடியிருப்புகள் கடந்த திங்கள்கிழமை இரவு சேதப்படுத்தப்பட்டன. இரவு 7 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் 21 வீடுகளை கடற்படையினர் கழற்றி தம்முடன் எடுத்துச் சென்றிருப்பதாகவும், 4 வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.
தாங்கள் பூர்வீகமாகக் குடியிருந்து வந்த இந்தக் கிராமத்தில் பெரும் பகுதியைக் கடற்படையினர் எடுத்துக் கொண்டது போக மிஞ்சியுள்ள சிறிய நிலப் பகுதியிலேயே தாங்கள் குடியேறி வாழ்ந்து வருகையிலேயே தமது குடியிருப்புக்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாக ஊர் முக்கிய பிரமுகரான மஃமூத் தவ்ஃபீக் கூறுகிறார்.
மறிச்சுக்கட்டி மரைக்கார் தீவுக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்த திர வவுனியா போலீஸ் உயர் அதிகாரி ஹேமந்த, இந்தச் சம்பவத்தில் 8 வீடுகளும் ஒரு பொது மண்டபமும் எரிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 4 வீடுகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இச்சம்பவத்தில் கடற்படையினருக்கு தொடர்புக் குறித்து சாட்சியங்கள் இல்லை என்று அவர் கூறுகிறார்.
இச்சம்பவத்திற்கு இலங்கை அமைச்சர் ரிஸாத் பதியுத்தீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைச் ஃபாரூக் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment