Saturday, September 29, 2012

அக்டோபர் 1 முதல் பாஸ்போர்ட் கட்டணமும் உயர்கிறது!

திருச்சி: வரும் 1ம் தேதி முதல் பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படுகிறது. தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற இனி ரூ.3,500 செலுத்த வேண்டும்.

 திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் கூறியதாவது:
பாஸ்போர்ட் கட்டணங்கள் கடந்த 1993வது ஆண்டு முதல்முதலாக ரூ.60ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் 9 ஆண்டுகளுக்கு பின் ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டது. இது கடந்த 10 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. 


இந்நிலையில் பாஸ்போர்ட் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, தனியார் துறையுடன் இணைந்து நாடு முழுவதும் ஏற்கனவே இருந்த 37 பாஸ்போர்ட் அலுவலகங்களுடன், 77 இடங்களில் பிஎஸ்கே எனப்படும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.

பாஸ்போர்ட் வழங்கும் முறைகளில் கணினி மயம், ஆன்லைன் விண்ணப்பங்கள், ஆன்லைனில் போலீஸ் பரிசீலனை மற்றும் சான்று வழங்குதல், பாஸ்போர்ட் விரைவுத் தபால் மூலம் டெலிவரி என பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு பாஸ்போர்ட் வழங்கும் முறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கான செலவினங்களை கருத்தில் கொண்டு, பாஸ்போர்ட் கட்டணத்தை ரூ.500 கூடுதலாக்கி புதிய கட்டணமாக ரூ.1,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மைனர் பாஸ்போர்ட்டுகளுக்கு ரூ.600 லிருந்து ரூ.1000மாகவும், இதர சேவைகள் அனைத்துக்கும் ஏற்கனவே உள்ள கட்டணங்களை விட ரூ.500 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தட்கல் பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,000த்துடன் ரூ.1500 சேர்த்து மொத்தம் ரூ.2,500 ஆக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது தட்கல் பாஸ்போர்ட்டுக்கு புதிய கட்டணமாக ரூ.3,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணங்களும் அமெரிக்க டாலரில் 40 லிருந்து 75 ஆகவும் ஐரோப்பிய யூரோவில் 48லிருந்து 60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza