புதுடெல்லி:ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் குஜராத் உயர் போலீஸ் அதிகாரிகளான டி.ஜி.வன்ஸாரா, பி.சி.பாண்டே மீது சி.பி.ஐ நாளை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும்.
சொஹ்ரபுத்தீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் கொலைகளைப் போலவே ஸாதிக் ஜமால் கொலையும் போலி என்கவுண்டர் என்பதை சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது. ஜமாலின் போலி என்கவுண்டர் கொலைக்கு உத்தரவிட்டது குஜராத் க்ரைம் ப்ராஞ்சில் உயர் போலீஸ் அதிகாரியான வன்ஸாரா மற்றும் பாண்டே என்பதை சி.பி.ஐ கண்டுபிடித்தது.
கடந்த 2003-ஆம் ஆண்டு லஷ்கர் போராளி இயக்கத்தைச் சார்ந்தவர் என குற்றம் சாட்டி நரோடாவில் திரைப்பட அரங்கிற்கு வெளியே வைத்து சுட்டுக் கொன்றதாக குஜராத் போலீஸ் கூறுகிறது. குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி, பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி, வி.ஹெச்.பியின் பிரவீண் தொகாடியா ஆகியோரை கொலைச்செய்ய ஸாதிக் ஜமால் திட்டம் தீட்டினார் என குஜராத் போலீஸ் கூறியது.
இந்நிலையில் ஸாதிக் ஜமாலின் சகோதரர் ஸாபிர் ஜமால் இதற்கு எதிராக குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தை அணுகியதை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வழக்கு விசாரணை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
மும்பை க்ரைம் ப்ராஞ்சில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் தயா நாயக், ஸாதிக் ஜமாலை கஸ்டடியில் எடுத்தார் என்பது சி.பி.ஐயின் விசாரணையில் தெரியவந்தது. தயா நாயக், ஸாதிக் ஜமாலை குஜராத் போலீஸிடம் ஒப்படைத்துள்ளார். மும்பையைச் சார்ந்த பத்திரிகையாளர் கேதன் திரோத்கரின் பிரமாணப்பத்திரம் இவ்வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஸாதிக் ஜமாலை, தயா நாயக் குஜராத் போலீஸிடம் ஒப்படைத்ததை தான் நேரில் கண்டதாக திரோத்கர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். பின்னர் மஹராஷ்ட்ரா-குஜராத் எல்லையில் வைத்து போலீஸ் துணை சூப்பிரண்ட் தருண் பரோட்டின் தலைமையிலான போலீஸ் கும்பல் ஸாதிக் ஜமாலை சுட்டுக் கொன்றது. பரோட்டை நேற்று முன்தினம் சி.பி.ஐ கைது செய்தது.
கொலைச் செய்யப்பட்ட ஸாதிக் ஜமாலின் உடலின் அருகில் துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிளையும் நிறுத்தி என்கவுண்டர் நிகழ்ந்தாக காட்டுவதற்கான போலியான ஆதாரங்களை உருவாக்கினர்.
இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேரை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொலைச் செய்த சம்பவத்திலும் இதே போலவே போலியாக ஆயுதங்களை அருகில் வைத்து என்கவுண்டர் நிகழ்ந்தது போன்ற சூழலை குஜராத் போலீஸ் உருவாக்கியதாக சி.பி.ஐ கூறுகிறது. குஜராத் போலீஸ் கூறுவது போல, நரோடாவில் உள்ள திரைப்பட அரங்கிற்கு வெளியே என்கவுண்டர் நடக்கவில்லை என்று சி.பி.ஐ கூறுகிறது
0 கருத்துரைகள்:
Post a Comment