Thursday, August 16, 2012

சுதந்திர தின கொண்டாட்டம் - உளறும் தமிழக காவல்துறை!

நமது தேசம் 65வது சுதந்திர தின கொண்டாட்டத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. அனைவருக்கும் சுதந்திர தின  நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம். நமது முன்னோர்கள் ஜாதி, மத பேதமின்றி ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக  இரத்தம் சிந்தி போராடியதன் வெற்றிக் கனிதான் நாம் இப்போது சுவாசித்துக் கொண்டிருக்கும் சுதந்திர காற்று.




இப்படிப்பட்ட சுதந்திர தின விழாவைக் கெளரவிக்கும் விதமாகவும், சுதந்திர போராட்டத்தின்  தியாக நினைவலைகளை மக்கள் மனதில் பூத்துக் குலுங்கச் செய்யும் விதமாகவும், சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாகவும்,  ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின அணிவகுப்பை பல மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது. 2008ம் ஆண்டு மதுரையிலும், 2009ம் ஆண்டு கும்பகோணத்திலும் 2010ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்திலும் இந்த நிகழ்ச்சியை  நாம் சிறப்பாக நடத்தியுள்ளோம்.  2011ல் நாம் நெல்லையில் நடத்த இருந்த சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் கடைசி நேரத்தில் அனுமதியை மறுத்து தனது சிறுபான்மையினர் எதிர்புணர்வை உறுதிபடுத்தினர்.


இதன் தொடர்ச்சியாக இந்த வருடம் தமிழகத்தில் மதுரை, நாகப்பட்டிணம், இளையாண்குடி ஆகிய இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியை  நாம் நடத்த முடிவு செய்து ஒரு மாதத்திற்கு முன்பே (அதாவது 06.07.2012) அன்றே மனு செய்திருந்தோம்.

சுதந்திர தினம் கொண்டாடுவதற்கான இந்திய குடிமகனின் உரிமைக்கு மீண்டும் ஒரு முறை அரசு அனுமதி மறுத்துள்ளது துரதிஷ்டவசமானது. வழக்கம் போல் தமிழக காவல்துறையினரின் இம்முறையும் கற்பனை மற்றும் யூகங்களை காரணங்களாக கூறி முஸ்லிம்களின் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளனர். ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டிய சுதந்திர தினத்தில் மிகப்பெரும் ஜனநாயக உரிமைப்படுகொலையை அரசு மற்றும் தமிழ காவல்துறையினர் செய்துள்ளனர்.‌

சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் நடப்பது என்ன?

சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி - சுதந்திர தினத்தை அனைத்து சமூக மக்களோடும் இணைந்து உற்ச்சாகமாக கொண்டாடும்  நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் தேச வளர்ச்சியில் அக்கறை கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் நமது அசோக சக்கரம் பதித்த மூவர்ண தேசிய கொடியை கம்பீரமாக ஏந்தி சீருடை அணிந்து அணிவகுத்து வருவார்கள்.

பொதுக்கூட்டம் ஆரம்பமாகும் போது நமது தேசத்தின் ஒற்றுமை கீதமான ஸாரே ஜஹான்ஸே அச்சா பாடலும், இறுதியில் தேசிய கீத பாடலும் உற்சாகத்துடன் பாடப்படும்.

சுதந்திர போராட்ட தியாகிகளை அழைத்து பொற்கிழி வழங்கி கெளரவிக்கப்படும். கலந்து கொண்ட அனைத்து நபர்களும் பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்போம் என்ற அடிப்படையில் சுதந்திர தின உறுதி மொழியை எடுப்பார்கள்.

இந்த அடிப்படையில் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியோடும் தேசப்பற்றோடும் கொண்டாடும் தேச பக்தர்களின் சங்கமமே சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி. உற்சாகமாக சுதந்திர தினத்தை கொண்டாடக்கூடிய இந்த நிகழ்ச்சிக்குத்தான் அரசு மற்றும் காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். இதற்கு இவர்கள் கூறும் காரணங்கள் வேடிக்கையானது. இதனை மக்கள் மன்றத்தில் சமர்பிக்கின்றோம்.

1. முஸ்லிம்கள் ஒன்றினைந்து சுதந்திர தினத்தை கொண்டாடி அணிவகுப்பு நடத்தினால் மற்ற மதத்தினருக்கு எதிராக மதப்பிரச்சனையை ஏற்படுத்துவார்கள். இதனால் பொது அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் இடையூறு ஏற்படும் என்று கூறியுள்ளனர்.

சுதந்திர தின அணிவகுப்பின் நோக்கமும் அதன் நிகழ்ச்சிகளும் சட்டத்திற்கு உட்பட்டவையே. 2008 முதல் 2010 வரை தமிழகத்தில் நாம் இதே நிகழ்ச்சியை எந்த விதமான மத மோதல்களும் இல்லாமல் அமைதியாகத்தான் நடத்தியுள்ளோம். 2009ல் கும்பகோணத்திலும், 2010ல் மேட்டுப்பாளையத்திலும் காவல்துறையினரின் அனுமதியுடனேயே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதமோதல், அசம்பாவிதம் நடைபெற்றதாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. நிகழ்ச்சி முழுவதையும் காவல்துறையினர் வீடியோ பதிவு செய்துள்ளனர். நாம் மற்ற மதத்தினர் புண்படும் படி பேசியதாக வரலாறே இல்லை. இப்படி அனைத்தையும் தெரிந்து கொண்டே மத மோதல்கள் உருவாகும் என்று காவல்துறையினர் கூறுவது முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற செயல். ஜனநாயகத்தின் உண்மையான எஜமானர்கள் இவற்றைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

2. அடுத்ததாக இவர்கள் கூறும் காரணம், நமது செயல்வீரர்கள் அணியும் சீருடை, அவர்கள் நடக்கும் நடை அணிவகுப்பில்  பயன்படுத்தும் வார்த்தைகள் ஆகியவை ராணுவம் மற்றும் போலிஸில் உள்ளது போல் உள்ளதாம். மேலும் சீருடை அணிந்து மிடுக்காக அணிவகுப்பு நடத்த யாருக்கும் உரிமையில்ல்லை என்றும் கூறியுள்ளனர்.

சீருடை அணிந்து பொதுமக்கள் அணிவகுப்பு நடத்தக்கூடாது என்று நாட்டில் எந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசன சட்டம் ஷரத்து 19 (1) (பி) ஆனது ஆயுதங்களின்றி அமைதியாக கூடிக் கலைவதற்கு உண்டான உரிமையை  அடிப்படை உரிமையாக வழங்கியுள்ளது. இது இப்படியிருக்க நாட்டை துண்டாட நினைக்கும் சங்கப்பரிவார ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் சீருடை அணிந்து  ஒவ்வொரு வருடமும் அணிவகுப்பு நடத்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.  ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களுடைய நிகழ்ச்சிகளில் அணிவகுப்பு நடத்துகின்றார்கள். சமீபத்தில் நடந்த டெசோ மாநாட்டிலும் கூட காவல்துறையினர் உபயோகப்படுத்தும் காக்கி நிற சீருடை அணிந்து அணிவகுப்பு நடைபெற்றது. இப்படியிருக்க முஸ்லிம்கள் மட்டும் சீருடை அணிந்து கம்பீரமாக தேசிய கொடியை ஏந்தி அணிவகுத்து வருவது மட்டும் அரசு மற்றும் காவல்துறையினருக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது?

முஸ்லிம்கள் குண்டுகளோடும், தீவிரவாத முத்திரையோடுமே இருக்க வேண்டும் என்கின்ற அவர்களின் சதித்திட்டத்தை முஸ்லிம் சமூகம் அடையாளம் கண்டுவிட்டது. முஸ்லிம் சமூகம் ஒரு போதும் அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை. இனியும் ஈடுபடாது. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக ஆக்கும் அவர்களின் திட்டத்தை கைவிட்டு அதிகாரிகளும் தமிழக அரசும் முஸ்லிம் சமூகத்தின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

3. மூன்றாவது இவர்கள் கூறும் காரணம் ஆகஸ்ட் 15 அன்று பல்வேறு சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சி உள்ளது. எனவே சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடும் நிகழ்ச்சிக்கு பந்தோபஸ்து கொடுக்க முடியாது. போலிஸ் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக பதில் கொடுத்துள்ளனர்.

2008,09,10 ஆகிய ஆண்டுகளில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தில் தானே இதே நிகழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காவல்துறையினரின் அனுமதியோடும், பாதுகாப்போடும் நடத்தியது. அதுவும் இப்போது நாம் நடத்துவதற்கு அனுமதி கேட்ட மதுரையிலேயே இந்த நிகழ்ச்சியை நாம் நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம். அப்போது பந்தோபஸ்து கொடுத்த காவலர்கள் இன்று எங்கே இருக்கின்றார்கள் என்ற கேள்வி நம்முன் எழுகின்றது. முஸ்லிம்கள் நடத்தும் சுதந்திர தின கொண்டாடத்திற்கு மட்டும் பந்தோபஸ்து கொடுக்க ஆளில்லை என்று கூறுவது வேடிக்கையான ஒன்றும். அப்படி ஆளில்லாமல் இருந்தால் தமிழக அரசு தமிழக காவல்துறையை பலப்படுத்துவது நல்லது. இந்த முறை மட்டும் இப்படிப்பட்ட காரணங்களை கூறுவது தமிழக அரசின் முடிவா? காவல்துறை அதிகாரிகளின் சிறுபான்மை விரோத போக்கு மனநிலையா? என்ற கேள்வி நம்முன் எழுகின்றது.

ஆகவே மேற்கூறிய காரணங்கள் அடிப்படையில் முஸ்லிம்களின் சுதந்திர தின கொண்டாடத்தில் அனுமதி மறுத்த காவல்துறையின் இந்த செயல் சிறுபான்மைச் சமூதாயத்தினரான முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட கூடாது. அவர்களை தேசத்திலிருந்து தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் என்று சித்ரிக்க முயலும் சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகளின் சிந்தனையை பிரதிபலிப்பதாக உள்ளதோ? என எண்ணத் தோன்றுகிரது.

சுதந்திர தினத்தை கொண்டாடுவது இந்திய குடிமகனின் உரிமை:

சுதந்திர தின கொண்டாட்டம் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தேச பற்றின் காரணமாக உருவாகும் உணர்வாகும். இதனை ஆக்கப்பூர்வமாக நாட்டின் நலுனுக்கு அரசு பயன்படுத்தியிருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக சுதந்திர போராட்டத்தின் பாரம்பரியத்திற்கு சொந்தமான ஒரு சமூகத்தை தேசிய நீரோட்டத்திலிருந்து அகற்றி தனிமைப்படுத்த விரும்பும் விஷமிகளின் முயற்ச்சிகள் விரைவில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் அவர்களின் விகிதாச்சாரத்தைவிட அதிகமான தியாகங்களை இந்நாட்டிற்காக செய்துள்ளனர்( சமூக ஆர்வலர் : குஷ்வந்த் சிங்கின் கூற்று).

சுதந்திரம் கிடைத்த நாளில் சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு கூட சுதந்திரம் இல்லை. இந்த நிலையை கண்டு நாம் ஒவ்வொருவரும் வேதனை படவேண்டும். இப்படிப்பட்ட நிலைகளை மாற்றுவதற்கு நாம் களத்தில் உறுதியாக ஒன்றினைந்த போராட முன்வரவேண்டும்.

வாருங்கள்! சுதந்திரத்தின் பாதுகாவலர்களாக!! நிலைக்கட்டும் சுதந்திரம்!  வெல்லட்டும் நம் தேசம்!!

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza