Thursday, August 23, 2012

உளவுத்துறை கடத்திய விமானம்:பகுதி-2!


இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் திட்டமிட்டு நடத்திய விமானக் கடத்தல் நியூஸ் ஸ்டோரியின், 1-ம் பாகத்தின் தொடர்ச்சி இது. 1-ம் பாகத்தை தவற விட்டிருந்தால், இங்கே கிளிக் செய்து படிக்கவும்!
தாம் விமானத்தை கடத்தப் போகும் விஷயம் தெரிந்துவிட்டதா என்று உள்ளே பதட்டமாக இருந்தாலும், அதை வெளியே காண்பிக்காமல் இயல்பாக இருந்தார் விமானி முனீர்.
விமானப் படையின் கன்ட்ரோல் ரூமுக்குச் சென்று, அவருக்குரிய பிளைட்-பிளானை (flight plan) பெற்றுக் கொண்டார். அப்போதுதான் கொஞ்சம் பயம் ஏற்பட்டது. காரணம் இவருக்கு கொடுக்கப்படும் பிளைட்-பிளான் எப்படிப்பட்ட பிளைட்-பிளானாக இருக்க போகின்றது என்பது அது கையில் கிடைக்கும்வரை தெரியவராது.

அந்த பிளைட்-பிளானில்தான் தங்கியிருக்கிறது, விமானம் கடத்தப்படுவதற்கான சாத்தியம்.
ஏன் அப்படி என்பதை இந்த இடத்தில் கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லிவிடுவது நல்லது. அதிகம் டெக்னிகலாக இல்லாமல், இலகுவாக சொல்கிறோம்.
எந்தவொரு விமானப் படையிலும், பயிற்சி விமானிகளுக்குக் கொடுக்கப்படும் பிளைட்-பிளான்களில் long-8, Short-8 என்று இரண்டு ரகம் உண்டு. இரண்டுக்கும் இடையே என்ன வித்தியாசம்? பறக்கப் போகும் உயரமும், சென்று திரும்பவுள்ள தொலைவும்!
இதில் 8 என்ற இலக்கம் எதற்கு என்றால், இந்த பிளைட்-பிளான்களில் கொடுக்கப்படும் பறக்கும் பாதை ‘8’ என்ற வடிவில் இருக்கும். 8 வடிவத்தின் நடுப்புள்ளிதான் விமானம் புறப்படும் விமானத்தளம்.
ஒரு முறை தரையிலிருந்து புறப்பட்ட விமானம் ஒரு திசையில் போய், ஒரு வட்டமடித்து திரும்பி வரும்போது, புறப்பட்ட விமானத் தளத்துக்கு மேலால் பறக்கும். அதை கடந்து போய் மீண்டும் ஒரு வட்டமடித்து திரும்பினால், பழையபடி விமானத் தளத்தின் ரன்வேயில் வந்து இறங்கும். இந்த பிளையிங் பட்டர்ன் இலக்கம் ‘8’ போல உள்ளது அல்லவா? அதுதான் long-8, Short-8 என்ற பெயர்கள்
இதில் Short-8 என்பது குறைந்த தூரத்திலேயே வட்டமடிப்பை செய்வது. அப்படிச் செய்யும்போது பறக்கும் தூரமும் குறைவாக இருக்கும். அதிக உயரத்துக்கு மேலேறும் அளவுக்கு நேரமும் போதாது. Long-8 இதற்கு நேரெதிர்.
விமானத்தை கடத்த திட்டமிட்டுள்ள முனீருக்கு, Short-8 பிளைட்-பிளான் கொடுக்கப்பட்டிருந்தால் கடத்தல் திட்டமே, கோவிந்தா!
ஏனென்றால் Short-8 பிளைட்-பிளானில், செல்ல வேண்டிய தூரமும், உயரமும் குறைவு என்பதால், எரிபொருளின் அளவும் குறைவாகவே தேவைப்படும். Short-8 பறத்தலை முடித்துக் கொண்டு விமானம் மீண்டும் ரன்வேக்கு வரும்போது, டேங்கில் எரிபொருள் அதிகமிருந்தால், அந்த எரிபொருளின் எடை, விமானத்தின் அதிகபட்ச இறங்கும் எடையைவிட (Maximum landing weight) அதிகமாக இருக்கும்.
அப்படி இருந்துவிட்டால் ஆபத்து. தரையிறங்கும் வேகத்தோடு, இந்த எடையும் சேர்ந்து, விமானத்தை ரன்வேயுடன் மோத வைத்துவிடும்.
மேலே கூறப்பட்டவை உங்களுக்குப் புரிந்திருந்தால் விசேஷம். புரியாவிட்டால் பரவாயில்லை. இப்படிப் புரிந்து கொள்ளுங்கள் – அன்றைய தினம் முனீருக்கு குறைந்த தூரம் பறப்பதற்கான பிளைட்-பிளான் கொடுத்தால், விமானத்தில் எரிபொருள் குறைவாகவே நிரப்பப்பட்டு கொடுக்கப்படும்.
முனீரின் திட்டம் விமானத்தை ஈராக்கை விட்டுக் கடத்துவது. அதற்கு, மிக்-21 விமானத்தின் டேங்கில், குறைந்தபட்சம் 40% எரிபொருள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஈராக் எல்லைகளைத் தாண்டும் முன்னரே, விமானத்தில் எரிபொருள் தீர்ந்துவிடும்.
Short-8 பிளைட்-பிளான் என்றால், டேங்கில் 20-25% எரிபொருள் நிரப்பி கொடுத்து விடுவார்கள். இதுதான் கடைசித் தடை.
முனீர் கொஞ்சம் பயத்துடனே தனக்குக் கொடுக்கப்பட்ட பிளைட்-பிளானை வாங்கிப் பார்த்தார். அன்று அதிஷ்டம் அவருக்கும், இஸ்ரேலுக்கும் இருந்தது. முனீருக்கு கொடுக்கப்பட்ட பிளைட் பிளான், Long-8!
அதைப் பெற்றுக் கொண்டு விமானத்துக்குள் ஏறினார். முதல் வேலையாக பைலட் சீட்டுக்கு இடதுபுறமுள்ள எரிபொருள் இன்டிகேட்டர் மீட்டரை பார்த்தார். விமானத்தில் சுமார் 55 சதவிகித எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது.
அது போதுமானது. விமானத்தை ஈராக்கை விட்டு கடத்திச் செல்ல தாராளமாக போதுமானது!
இதோ, ஈராக்கிய மண்ணில் அவரது இறுதி நிமிடங்கள். ஈராக் பாதுகாப்பு படையினருக்கு, முனீரின் குடும்பம் மிஸ்ஸிங் என்ற தகவல் இப்போது தெரியவந்தாலும், அவரது விமானம் புறப்படுவதற்கு கிளியரன்ஸ் கிடைக்காது!
விமானத்திலிருந்து கன்ட்ரோல் டவரைத் தொடர்பு கொண்ட முனீர், Take-off Clearence கேட்டார்.
உடனே கிடைத்தது. “ஆகா.. இவர்களுக்கு இன்னமும் விஷயம் தெரியவரவில்லை”
உடனே விமானம் கிளம்பி, வேகம் பிடித்து, ரன்வேயில் ஓடி மேலேறியது… ஈராக்கின் தரையைவிட்டுக் கடைசித் தடவையாக!
முனீருக்கு கொடுக்கப்பட்டிருந்த பிளைட்-பிளானின்படி அவர் பறந்த திசை, ஈராக்-துருக்கி எல்லையிலிருந்து சுமார் 10 பாகை விலகிய பாதை. கீழேயிருப்பவர்களுக்குச் சந்தேகம் ஏற்படாதபடி அந்தப் பாதையில் பறந்தார். பிளைட்-பிளானின்படி, முதலாவது 45 பாகை திரும்ப வேண்டிய இடத்துக்கு அருகே வந்தபோது, திரும்பவில்லை. தொடர்ந்தும் சில நிமிடங்கள் பறந்து, உயரத்தை அதிகரித்து, 10 பாகை எதிர்புறமாகத் திரும்பி, துருக்கி நாட்டு எல்லையை நோக்கி பறக்க துவங்கினார்.
விமானத்தை முனீரால் கடத்த முடிந்ததா? அதன்பிறகு அவருக்கு என்ன ஆயிற்று? அந்த விபரங்களை, நாளை வெளியாகும் இறுதிப் பாகத்தில் படியுங்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்......!

நன்றி: விறுவிறுப்பு.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza