புதுடெல்லி:புனித ஹஜ் பயணிகளுக்கான அரசு ஒதுக்கீட்டை குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அடுத்த ஆண்டில் அமல்படுத்த அனுமதி தர வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நேற்று(வெள்ளிக்கிழமை)நிராகரித்தது.
இது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாகனவதி, வழக்குரைஞர் ஹாரிஸ் பெரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஒதுக்கீட்டை குறைத்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்த ஆண்டு அமல்படுத்த அனுமதி தர வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அஃப்தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசின் கோரிக்கையை நிராகரித்தது.
கடந்த 23-ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில், உயர் பதவியில் உள்ளவர்கள் பரிந்துரை செய்யும் ஹஜ் பயணிகள் ஒதுக்கீட்டை 5,050-லிருந்து 300-ஆக குறைத்துவிட்டது. அதன்படி, குடியரசுத் தலைவருக்கு 100, குடியரசுத் துணைத் தலைவர் – 75, பிரதமர் -75, வெளியுறவுத் துறை அமைச்சர் – 50 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இந்திய ஹஜ் கமிட்டிக்கான ஒதுக்கீட்டை 500-க்குப் பதிலாக 200-ஆக குறைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஹஜ் யாத்திரைக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளை எதிர்த்து அந்நிறுவனத்தினர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் விசாரித்தனர்.
2009 மற்றும் 2010-ம் நிதியாண்டுகளில், ஆண்டுக்கு ரூ. ஒரு கோடி வரவு – செலவு மேற்கொள்ளும் நிறுவனங்கள் மட்டுமே ஹஜ் பயணிகளை அழைத்துச் செல்ல முடியும் என்று மத்திய அரசு புதிய விதிமுறையை கொண்டு வந்தது. இதனால், பல சுற்றுலா நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
இது குறித்து நீதிபதிகள் தெரிவித்ததாவது: அரசின் புதிய கொள்கை நியாயமற்றது. இந்தக் கொள்கை, ஒரு சில சுற்றுலா நிறுவனங்கள் ஏகபோகமாக செயல்பட வழிவகுத்து விடும். எனினும், இந்த ஆண்டுக்கான அரசின் விதிமுறையில் தலையிட நாங்கள் விரும்பவில்லை.
அதே சமயம், அடுத்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யும் தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு புதிய கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும். புதிய கொள்கையை வரும் நவம்பர் மாதம் நீதிமன்றம் பரிசீலிக்கும் என்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment