டமாஸ்கஸ்/அங்காரா:சிரியாவின் 2-வது பெரிய நகரமான அலப்போவில் எதிர்ப்பாளர்களுடன் மோதல் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து அப்பகுதிக்கு கூடுதல் ராணுவத்தினரை அரசு அனுப்பியுள்ளது. வடமேற்கு நகரமான இத்லிபில் இருந்து ஆயிரக்கணக்கான ராணுவத்தினரை எதிர்ப்பாளர்களை விரட்ட சர்வாதிகார பஸ்ஸார் அரசு அனுப்பியுள்ளது.
நேற்று மட்டும் அலப்போவில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் எதிர்ப்பாளர்களை பஸ்ஸார் அரசு எதிர்கொள்கிறது. அலப்போ நகரத்தை எதிர்ப்பாளர்களிடமிருந்து கைப்பற்றுவது ஆஸாத் அரசின் வாழ்வா? சாவா? போராட்டமாக மாறியுள்ளது.
இதனிடையே சிரியாவுடனான எல்லையை துருக்கி மூடியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் எழுந்துள்ள சூழலில் எல்லையை மூடுவதாக துருக்கி வர்த்தக அமைச்சர் ஹயாதி அஸீஸி தெரிவித்துள்ளார். அதேவேளையில், புலன்பெயர்வோர் எல்லை வழியாக துருக்கியில் நுழைய அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். எல்லையை மூடுவது பஸ்ஸாருல் ஆஸாத் அரசுக்கு கடுமையான பின்னடைவாகும்.
இந்நிலையில், சிரியாவின் யு.ஏ.இ மற்றும் சைப்ரஸ் தூதர்கள் அணி தாவி கத்தருக்கு சென்றுள்ளதாக எதிர்க்கட்சி அமைப்புகள் தெரிவித்துள்ளன. யு.ஏ.இக்கான சிரியா தூதர் அப்துல் லத்தீஃப் அல் தப்பாக், அவரது மனைவியும் சைப்ரஸ் தூதருமான லாமியா அல் ஹரீரி ஆகியோர் அணி மாறியுள்ளனர். இவர்கள் அணி மாறியது குறித்து சிரியா அரசு பதிலளிக்கவில்லை.
சிரியா அமைச்சர்களை கொலைச் செய்ததை கண்டிக்காத அமெரிக்காவின் கொள்கையை ரஷ்யா கண்டித்துள்ளது. அமெரிக்கா தீவிரவாத்தை நேரடியாக ஆதரிப்பதன் காரணமாகவே கொலைகளுக்காக கண்டனம் தெரிவிக்கவில்லை என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸெர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.
சிரியா ராணுவத்தின் கைவசமுள்ள இரசாயன ஆயுதங்கள் பாதுகாப்பாக உள்ளதாக தனக்கு உறுதி கிடைத்துள்ளது என்று லாவ்ரோவ் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment