Saturday, July 28, 2012

இனிக்கும் இல்லறம்–6

இனிக்கும்இல்லறம்1
அரபு மொழியில் வீட்டிற்கு ‘மகான்’ என்றதொரு பெயர் உண்டு. அதன் ஆழமான பொருள் அமைதி தவழும் இல்லம் என்பதாகும்.
செங்கற்களும், சிமெண்டும், மணலும் சேர்த்து அழகானதொரு வீட்டை கட்டினால் மட்டும் போதாது அந்த வீட்டில் வசிப்போர் இடையே அமைதி நிலவவேண்டும். அப்பொழுதுதான் அந்த இல்லம் அமைதி தவழும் இல்லமாக மாறும். லட்சக்கணக்கான பணத்தை செலவழித்து வீட்டை கட்டிவிட்டு அங்கே வசிப்போர் இடையே சண்டைச் சச்சரவுகள் நிலவி உறவுகள் சீர்கெட்டு குடும்பத்தில் அமைதி குலைந்தால் காசை செலவழித்து என்ன பயன்?
அன்பு, அமைதி, ஆறுதல் என்பது திருமணத்தின் மூலமாக தம்பதியினர் இடையே உருவாக வேண்டும். அவ்வாறு உருவாகவில்லை எனில் திருமணம் முடித்து என்ன பலன்?

இன்று திருமணம் புரியும் ஆணாயினும், பெண்ணாயினும் சரி ஒரு பட்டியலை தயார்செய்து வைத்திருப்பார்கள். கணவன், தனது மனைவி தனக்கு எவ்வாறெல்லாம் உதவவேண்டும்?என்ற பட்டியலை தயார்செய்து வைத்திருப்பார். மனைவி தனது கணவன் தனக்கு எவ்வாறெல்லாம் உதவவேண்டும்?என்ற பட்டியலை தயார்செய்து வைத்திருப்பார். இவ்வாறு பட்டியல் தயாரித்தா திருமணம் புரிவது? அடுத்தவரால் தனக்கு என்ன ஆதாயம் என கணக்கிட்டு திருமணம் முடித்தால் அந்த இல்லற வாழ்க்கையில் இனிமை தவழுமா? அங்கேதான் பிரச்சனைகளே உருவாகிறது.
‘நான் எனது மனைவிக்கு எவ்வாறெல்லாம் உதவலாம்?’ என்று கணவனும், ‘நான் எனது கணவருக்கு எவ்வாறெல்லாம் உதவலாம்?’ என மனைவியும் பரஸ்பரம் கருதுவார்களானால் அந்த இல்லறம்தான் இனிமையாக மாறும். திருமணம் என்பது பரஸ்பரம் ஒருவர் மற்றவருக்கு உதவுவதற்குத்தானே தவிர ஒருவர் மட்டும் உதவியை பெறுவதல்ல. அது நியாயமும் இல்லையே!
இல்லறத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் தாம்பத்தியத்தில் கூட ஒரு ஆண் தான் மட்டும் சுகம் அனுபவிக்கவேண்டும் என கருதினால் ஒவ்வொரு முறையும் அவன் தோல்வியையே தழுவுகிறான். தனது துணையும் இன்பத்தை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் தாம்பத்தியத்தில் ஈடுபடும் கணவர் தாம் ஒவ்வொரு முறையும் வெற்றிப் பெற்றவராக மாறுகிறார். இதுதான் உண்மை.
கணவன்-மனைவி இடையே பிரச்சனையை உருவாக்கும் காரணிகளில் ஈகோ(ego)-விற்கும் முக்கிய இடம்உண்டு. குடும்பத்தில் தனக்கு மட்டுமே அதிகாரம், தான் மட்டுமே சிறந்தவர் என்ற மனப்பாங்கு சில்லறை விஷயங்களிலும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். படிப்பு, பதவி, குடும்ப பின்னணி ஆகியவற்றில் கணவன் மனைவியை விடவோ அல்லது மனைவி கணவனைவிடவோ சற்று அதிகமான தகுதியை பெற்றிருந்தால் இத்தகைய ஈகோ(ego) உருவாக வாய்ப்புள்ளது. இல்லறத்தில் இத்தகைய சில்லறைத்தனமான மனப்பாங்கு உருவாக எச்சூழலிலும் கணவனோ, மனைவியோ இடமளித்து விடக்கூடாது. ‘எனது கணவர் என்னை விட அதிகமாக படித்தவரா? அல்லது நல்ல வேலையில் அமர்ந்துள்ளாரா? அது எனக்கு மகிழ்ச்சியே! ஏனெனில் அவர் என்னவர்! இதில் ஏன் நான் பொறாமைப்பட வேண்டும்?’ என்ற எண்ணம் தான் மனைவிக்கு ஏற்பட வேண்டும். ‘மனைவி என்னைவிட அதிகமாக படித்துள்ளாரா? ‘என்னை விட அதிக மதிப்புடைய பதவியில் அமர்ந்துள்ளாரா? இதில் எனக்கு பொறாமை பட என்ன இருக்கிறது. அவள் எனக்குரியவள் அல்லவா?’ என்ற சிந்தனைதான் கணவனுக்கு ஏற்பட வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஈகோ(ego) உருவாகிவிட்டால் அது பொறாமை, தாழ்வு மனப்பாண்மை என வளர்ந்துக் கொண்டே செல்லும். கணவனும், மனைவியும் பரஸ்பரம் ஒருவர் மற்றவரின் முன்னேற்றத்தில் அக்கறையும், ஆர்வமும் உடையவர்களாக மாறவேண்டும்.
திருக்குர்ஆனில் இறைவன் கணவன்-மனைவியை ஜோடி(الزوج) என்றே குறிப்பிடுகிறான். இதற்கு ஆங்கிலத்தில் spouse என்று கூறுவார்கள். எவ்வளவு அழகான, அன்னியோன்யமான வார்த்தையை குர்ஆன் பயன்படுத்தியுள்ளது என்பதை பார்த்தீர்களா?
இதனைப் புரிந்துக்கொண்டால் இல்லறத்தில் ஏது இடையூறு?
திருமணம் ஏன் புரிகிறோம்? என்பது குறித்து துவக்கத்தில் பார்த்தோம். திருமணத்தின் முக்கிய காரணங்களில் முதன்மையானவை அமைதியும், ஆறுதலும், உவப்பும், கிருபையுமாகும்.
இதனை திருக்குர்ஆனில் இறைவனாகிய அல்லாஹ் கூறும் வார்த்தைகள் ஊடே அலசிப் பாருங்கள்:
“இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.”(அல்குர்ஆன்30:21).
திருமணம் என்பது ஒரு சடங்கு அல்ல. ஊர் உலகத்திற்காகவும், உடல் இச்சையை தீர்த்துக்கொள்ளவும் மட்டும் திருமணம் முடிப்பது இல்லறத்தை கசக்கச் செய்துவிடும். ஆன்மாவை ஆன்மாவுடன் இணைக்கும் உறுதிமிக்க ஓர் ஒப்பந்தமே திருமணம். இதில் பாசமும், கருணையும், தூய்மையான அன்பும் செழித்து வளருகிறது. நேசமும் இதமும் மிக்க இந்த இல்லறத்தில் கணவன், மனைவி இருவரும் மன நிம்மதி, மகிழ்ச்சி, அமைதி, பாதுகாப்பு எனும் அருட்கொடைகளைப் பெறுகிறார்கள். இதற்காகத்தான் அல்லாஹ் இரு ஆன்மாக்களுக்குமிடையே திருமண பந்தத்தை ஏற்படுத்துகிறான்.
ஆனால், இன்று திருமணம் முடித்த பெரும்பாலானோர் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதில் இழைத்த தவறின் காரணமாக இம்மூன்றையும் (அன்பு, அரவணைப்பு, அமைதி) இழந்து தவிக்கிறார்கள்.
சமநிலை என்பதே திருமணத்தின் மூலமாகத்தான் உருவாகிறது.
திருமணம் மூலமாக இறைவன் நமக்கு தந்துள்ள இந்த அருட்கொடைகளை நாம் புறக்கணிக்கலாமா?
சரி! இனி மகிழ்ச்சியான குடும்பத்தை கட்டியெழுப்புவது குறித்து பார்ப்போம்!
இன்ஷாஅல்லாஹ்தொடரும்….

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza