கெய்ரோ:எகிப்தில் நெருக்கடி சூழலை உருவாக்கும் விதமாக இஸ்லாமியவாதிகளும், ராணுவமும் பகிரங்கமான மோதலுக்கு தயாராகி வருகின்றனர். நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவோம் என்ற இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அறிவிப்பு புகைந்து கொண்டிருந்த மோதலை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
இஸ்லாமியவாதிகளுக்கு பெரும்பானமை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் பரிந்துரைத்த அமைச்சரவையை அங்கீகரிக்க ராணுவ கவுன்சில் மறுத்தது மற்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தவர்களை தங்களிடமிருந்து அகற்றிய ராணுவத்தின் செயல் ஆகியன இஃவானுல் முஸ்லிமீனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மதசார்பற்ற கூட்டணியை மாற்றவேண்டாம் என்று கருதிய இஃவான், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தது. ஹுஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகள் ஏகாதிபத்திய ஆட்சிக்கு முடிவுகட்டிய மக்கள் புரட்சிக்கு பிறகு ஜனநாயக நடைமுறைக்கான மாற்றத்திற்காக இரு தரப்பினரும் பரஸ்பரம் ஒத்துழைக்க தயாராகினர்.
முபாரக் ஆட்சியில் சக்தியையும் செல்வாக்கையும் உறுதிச்செய்த ராணுவம் ஆட்சியை விட்டு அகல தயங்கி வருவதே பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணமாகும்.
இஸ்ரேலையும், அமெரிக்காவையும் திருப்திப்படுத்தும் விதத்தில் இஃவான்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காது என்பதை புரிந்துகொண்ட ராணுவம், தனது தனிக் குணத்தை காட்டத் துவங்கியதே புதிய பிரச்சனைகளுக்கு வழிவகுத்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும், ராணுவத்தின் உயர் பதவியில் இருப்பவர்களுக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் விதமாக பரிபூரணமான ஜனநாயகமயம் என்பதுதான் இஃவானுல் முஸ்லிமீன் நோக்கமாகும்.ஆனால், அமெரிக்காவின் அழுத்தத்தின் அடிப்படையில் செயல்படும் ராணுவ அரசு இதனை ஏற்றுக்கொள்ளாது என்பதன் அறிகுறிதான் பாராளுமன்றம் பரிந்துரைத்த அமைச்சரவைக்கு பதிலாக ஹுஸ்னி முபாரக்கின் கீழ் பிரதமராக இருந்த கமால் அல் கன்ஸூரியின் அமைச்சரவையை நியமிப்பதற்கான ராணுவத்தின் முடிவாகும்.
புரட்சியை முறியடிக்கவோ, அதிபர் தேர்தலில் தனது செல்வாக்கை பயன்படுத்தவோ ராணுவ அரசு முயற்சித்தால் மீண்டும் ஒரு புரட்சியை நடத்தவும் மக்களுக்கு திராணி உண்டு என்று இஃவானுல் முஸ்லிமீன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனநாயகத்தை பலவீனப்படுத்த இஃவானுல் முஸ்லிமீன் தலைமையிலான இஸ்லாமியவாதிகள் முயற்சிப்பதாக ராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது. இஃவான்களின் எச்சரிக்கையும், ராணுவத்தின் மிரட்டலும் எகிப்தின் அரசியல் மீண்டும் நெருக்கடியை நோக்கி செல்லுமோ? என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவுடன் ஒத்துழைக்கமாட்டோம் என்று மேற்கத்திய ஆதரவாளர்களான மதசார்பற்றவாதிகள் அறிவித்திருப்பது ராணுவம் தலையிட வாய்ப்பை உருவாக்குமா? என்ற கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.
அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவில் இஸ்லாமியவாதிகள் பெரும்பான்மையாக இடம்பெற்றுள்ளதாக தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த மதசார்பற்றவாதிகள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்களின் எதிர்ப்பிற்கு ராணுவத்தின் ஆதரவும் இருப்பதாக கருதப்படுகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment