Wednesday, March 28, 2012

ஃபஸல் கொலை வழக்கு: மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு பங்கு!


ஃபஸல்

கொச்சி:கேரள மாநிலம் தலச்சேரியில் என்.டி.எஃப் உறுப்பினர் முஹம்மது ஃபஸல் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் மேலும் பல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களை சி.பி.ஐ தேடி வருகிறது.
சி.பி.எம்(மார்க்ஸிட் கம்யூனிஸ்ட்) மாவட்ட கிளையைச் சார்ந்த தலச்சேரி அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த தலைவர்களை திருவனந்தபுரம் சி.பி.ஐ யூனிட் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சி.பி.எம் முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.சசியிடம் திங்கள் கிழமை ஆஜராக சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் தனிப்பட்ட காரணங்களை காட்டி ஆஜராகவில்லை. இதனால் இன்னொரு தினம் ஆஜராக கோரி நோட்டீஸ் அனுப்பப்படும் என்று விசாரணை அதிகாரி கூறுகிறார்.

ஃபஸல் கொலை வழக்கு சதித் திட்டத்தில் மூத்த மார்க்சிஸ்ட் கம்யூ. தலைவர்களுக்கு பங்கிருப்பதாக சி.பி.ஐ சந்தேகிக்கிறது. நேற்று முன்தினம் மூன்று குற்றவாளிகளை கைது செய்ததுடன் எர்ணாகுளம் முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் சி.பி.ஐ இத்தகவலை குறிப்பிட்டுள்ளது. இதன் பின்னர் தலச்சேரியைச் சார்ந்த ராஜன், சந்திரசேகரன் ஆகிய சி.பி.எம் தலைவர்களிடம் சி.பி.ஐயின் கொச்சி அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதிலும் ஆஜராகவில்லை. இவர்கள் ஆஜராகாததன் மூலம் ஃபஸல் கொலையில் மார்க்சிஸ்ட் மேலிடத்தின் பங்கு குறித்த சந்தேகம் வலுத்துள்ளது. இரண்டுபேரும் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
சந்தேகிக்கும் சி.பி.எம் தலைவர்களின் பெயரை வெளியிட சி.பி.ஐ மறுத்துவிட்டது. மூன்று பைக்குகளில் வந்த எட்டு நபர்களை கொண்ட கும்பலால் வெட்டப்பட்ட ஃபஸல் மரணமடைந்தார் என்று சி.பி.ஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் பயணித்த பைக்குகளில் ஒன்றை நேற்று முன்தினம் சி.பி.ஐ பறிமுதல் செய்தது.
2006 அக்டோபர் 22-ஆம் தேதி தலச்சேரி கோடியேரியில் வைத்து ஃபஸல் கொல்லப்பட்டார். தேசாபிமானி என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழின் ஏஜண்டாக பணியாற்றிய ஃபஸல் என்.டி.எஃபில் சேர்ந்து பணியாற்றினார். இளைஞர்களை என்.டி.எஃபில் உறுப்பினர்களாக சேர்க்க ஃபஸல் முயற்சித்தது மாவட்ட சி.பி.எம்முக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் மார்க்சிஸ்ட் குண்டர்கள் ஃபஸலை கொடூரமாக கொலைச் செய்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza