சண்டிகர்:பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொலை தொடர்பாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பல்வந்த் சிங் ரஜோனாவுக்கு திட்டமிட்டபடி வரும் 31-ம் தேதி தண்டனையை நிறைவேற்றும்படி சண்டிகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில், தூக்கு தண்டனைக்கு எதிராக பஞ்சாப்பில் முழு அடைப்பு போராட்டத்தால் இன்று இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1995-ம் ஆண்டில் பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங் உள்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக பப்பர் கால்சா அமைப்பைச் சேர்ந்தவரான ரஜோனாவுக்கு கடந்த 5-ம் தேதி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட லக்வீந்தர் சிங் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் ரஜோனாவை திட்டமிட்டபடி தூக்கிலிட இயலாது எனக் கூறி நீதிமன்ற நோட்டீஸை சிறைக் கண்காணிப்பாளர் திருப்பியனுப்பினார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை உத்தரவிட்ட நீதிமன்றம், திட்டமிட்டபடி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
முழு அடைப்பு…
பல்வந்த் சிங்கின் தூக்கு தண்டனை நாள் குறிக்கப்பட்ட விவகாரம் பஞ்சாபில் அனைத்து அரசியல் கட்சிகளிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அவரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது. பஞ்சாப் மாநில ஆளும் கட்சியான சிரோமணி அகாலிதளம் இந்த கோரிக்கையை முன்னின்று வலியுறுத்தி வருகிறது.
பல்வந்த் சிங் ரஜோனாவுக்கு ஆதரவாக பஞ்சாப் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு சீக்கிய அமைப்பினர் பஞ்சாபில் இன்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இந்த முழு அடைப்பு காரணமாக, அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment