பீஜிங்:சிரியாவில் நடந்துவரும் மோதலை முடிவுக்கு கொண்டுவர அரபு லீக்-ஐ.நா மத்தியஸ்தர் கோஃபி அன்னன் பரிந்துரைத்த ஆறு அம்ச திட்டத்தை சிரியா அரசு அங்கீகரித்துள்ளது.
ஒரு ஆண்டிற்கும் மேலாக சிரியாவில் நடந்து வரும் மோதலை முடிவுக்கு வரும் என கருதப்படும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை கோஃபி அன்னனின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.
போர் நிறுத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை அங்கீகரிப்பதாக சிரியா அரசு எழுதிய கடிதம் கிடைத்துள்ளதாக கோஃபி அன்னனின் செய்தி தொடர்பாளர் அஹ்மத் ஃபவ்ஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனை சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோஃபி அன்னன் உறுதிச்செய்துள்ளார்.
சிரியா அரசின் தீர்மானம் ஆறுதலை அளிப்பதாகவும், சமாதான திட்டங்களை அமல்படுத்துவதற்கான சூழல உருவாக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரி பஸ்ஸாருல் ஆஸாதிற்கு கடிதம் எழுதியுள்ளதாக கோஃபி அன்னன் கூறியுள்ளார்.
அமைதி திட்டத்திற்கு ஆதரவு தேடி சீனாவிற்கு சென்றுள்ள கோஃபி அன்னன் சீன அதிபர் வென் ஜியோபோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அன்னனின் முயற்சிகளுக்கு சீனா முழு ஆதரவை அளித்துள்ளது.
மக்கள் வாழும் பிரதேசங்களில் இருந்து ராணுவத்தையும், டாங்குகளையும் வாபஸ் பெறல், கைது செய்யப்பட்டவர்களை விடுதலைச்செய்தல், மோதல் நிகழும் பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்கல், ஐ.நாவின் மேற்பார்வையில் மோதல்களை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகியவைதான் அன்னனின் சமாதான பரிந்துரைகள் ஆகும். இதனை தவிர எதிர்கட்சியுடன் நல்லிணக்கத்திற்கு பேச்சுவார்த்தையை துவக்குவதும் அடங்கும்.
அதேவேளையில் அமைதிக்கான பரிந்துரைகளை எதிர்கட்சியினர் நிராகரித்துள்ளனர். பரிந்துரைகளை பஸ்ஸாரின் சர்வாதிகார அரசு அங்கீகரித்துள்ள சூழலில் எதிர்தரப்பினர் தங்களது முந்தைய முடிவை மறுபரிசீலனைச் செய்வார்களா என்பது தெரியவில்லை.
இதனிடையே துருக்கி சிரியாவிற்கான விமான சேவையை நிறுத்திவிட்டது. நேற்று முன் தினம் தூதரகத்தை மூடியிருந்தது. லெபனான் எல்லையில் சிரியா ராணுவத்திற்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெறுவதாக லெபனான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். லெபனானிற்கு புலன்பெயர்வோரை சிரியா ராணுவம் தடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
0 கருத்துரைகள்:
Post a Comment