புதுடெல்லி:ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்(ஜெ.என்.யு) மீண்டும் சிவப்பு அங்கியை அணிந்துள்ளது. மாணவர் யூனியனுக்கு நடந்த தேர்தலில் நக்ஸலைட் அனுதாபிகளான தீவிர இடதுசாரி மாணவர் அமைப்பு ஆல் இந்தியா ஸ்டுடெண்ட்ஸ் அசோசியேசன்(எ.ஐ.எஸ்.எ) அபார வெற்றியை பெற்றுள்ளது.
தேர்தலில் யூனியனின் நான்கு நிர்வாகிகள் பதவிகளையும் இவ்வமைப்பு கைப்பற்றியுள்ளது. மேலும் எ.ஐ.எஸ்.எ யூனியன் கவுன்சில் தேர்தலிலும் பெரும்பான்மையை பெற்றுள்ளது. பெரும் வெற்றியை பெற்றதில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பல்கலை கழக வளாகத்தில் எ.ஐ.எஸ்.எ மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். ‘நக்ஸல் பாரி, லால் ஸலாம்’ போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
சேர்மன் தேர்தலில் போட்டியிட்ட எ.ஐ.எஸ்.எ வேட்பாளர் சுசேதா டே சாதனை வெற்றியை பெற்றுள்ளார். இடதுசாரி மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐயின் ஸிகோ தாஸ் குப்தாவை 1251 வாக்குகள் வித்தியாசத்தில் சுசேதா தோற்கடித்தார். எ.ஐ.எஸ்.எஃபின் ஆதரவு பெற்ற தாஸ் குப்தாவுக்கு 751 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
போட்டியிட்ட வேட்பாளர்களில் 3 பேர் தவிர வெற்றி பெற்ற அனைவரும் எ.ஐ.எஸ்.எவின் வேட்பாளர்கள் ஆவர். தோல்வியடைந்த 3 இடங்களிலும் வாக்குவித்தியாசம் மிக குறைவே. அனகா இன்கோலை 640 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எ.ஐ.எஸ்.எவின் வேட்பாளர் அபிஷேக் குமார் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரவி பிரகாஷ் சிங் பொதுச்செயலாளராகவும், முஹம்மது ஃபெரோஸ்கான் துணை செயலாளராகவும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்மூன்று பதவிகளுக்கான போட்டியுல் எஸ்.எஃப்.ஐ 2-வது இடத்தை பிடித்தது.
ஆட்சியாளர்களுக்கும், ஊழலுக்கும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கும் எதிரான நிலைப்பாட்டின் அங்கீகாரம்தான் தங்களின் வெற்றி என்று சுசேதா டே கூறினார். கவுன்சிலில் எ.ஐ.எஸ்.எ 16 இடங்களை கைப்பற்றியது. வலது சாரி ஹிந்துத்துவா மாணவர் அமைப்பான எ.பி.வி.பிக்கு 3 இடங்களே கிடைத்தன. என்.எஸ்.யு.ஐ நான்கு இடங்களை கைப்பற்றியது. எஸ்.எஃப்.ஐ 3 இடங்களை வென்றது.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஜெ.என்.யுவில் இதற்கு முன்பு தேர்தல் நடந்தது. அப்போதைய தேர்தலிலும் எ.ஐ.எஸ்.எ(AISA) நான்கு முக்கிய பதவிகளுக்கான தேர்தலில் வெற்றிப்பெற்றது. ஆனால் லிங்டோ(Lyngdoh) கமிட்டி அறிக்கையின் சிபாரிசுகளை மீறியதாக சுட்டிக்காட்டி கடந்த நான்கு ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் தேர்தலுக்கு தடை விதித்திருந்தது.
0 கருத்துரைகள்:
Post a Comment