திருநெல்வேலி:கூடங்குளம் அணுமின்நிலையம் எந்த வேளையிலும் திறக்கப்படலாம் என்ற அச்சம் நிலவும் சூழலில் கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வலையில் உள்ளது. போராட்டம் நடக்கும் இடிந்த கரை, ராதாபுரம் தாலுகா மற்றும் அணு உலை எதிர்ப்பு குழுவிற்கு ஆதரவான பகுதிகளில் எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு துணை டி.ஜி.பி எஸ்.ஜார்ஜ் நேற்று முன்தினம் கூடங்குளம் வருகை தந்திருந்தார். அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அணுமின் நிலையம் திறப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்மக்கள் கருதுகின்றனர். காலை முதல் போலீஸ் ரேபிட் ரெஸ்பான்ஸ் டீமின் ’வஜ்ரா’ உள்ளிட்ட வாகனங்கள் அப்பகுதி வந்ததை தொடர்ந்து அதிகமான மக்கள் போராட்டம் நடைபெறும் இடத்தில் திரண்டுள்ளனர்.
நேற்று மதியம் அணு உலை எதிர்ப்பு குழு தலைவர் எஸ்.பி.உதயகுமார் கைது செய்யப்படலாம் என்ற வதந்தி கிளம்பியது. இதனைத் தொடர்ந்து போராட்ட குழு அவசர கூட்டத்தை நடத்தி மக்களை அமைதிப்படுத்தியது. போராட்ட குழு தலைவர்களை கைது செய்து மாற்றவும், போராட்டம் நடக்கும் பகுதிகளை போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும் முயற்சிகள் நடக்கிறது.
ஆனால், 202 தினங்களை கடந்த நிலையில் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் இருந்து ஒரு இஞ்ச் கூட மாற்றம் இல்லை என்ற முடிவில் கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் உறுதியாக உள்ளனர். காலை முதல் போராட்டம் நடக்கும் பந்தலில் பெண்கள், குழந்தைகள் என கிராம மக்கள் திரண்டு வந்தனர். அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று விஜயாபதி கிராமத்தில் இருந்து கூடங்குளம் நோக்கி பால்குடம் ஏந்தியவாறு கிராம மக்கள் ஊர்வலம் செல்கின்றனர்.
சாதாரண மக்களின் பீதியை நீக்குவதற்கு பதிலாக மன்மோகன் சிங் அரசு பணத்தை குறித்து மட்டுமே பேசுகிறது என்றும், போராட்டக் குழு மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அணு உலைக்கு எதிரான மக்களின் உணர்வை திசை திருப்பும் முயற்சி என்றும் அணு உலை எதிர்ப்பு குழு தலைவர் பேராசிரியர் எஸ்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment