லக்னோ:இந்தியாவில் மிக அதிகமான வாக்காளர்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக நடந்த தேர்தல் நேற்று முடிவுற்றது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் உ.பியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை உருவாகும் என தெரியவந்துள்ளது.
முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாதி பார்ட்டி(எஸ்.பி) தனிப்பெரும் கட்சியாக மாறும் என்று ஸ்டார் நியூஸ்- ஏ.சி. நீல்சன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு கூறுகிறது. சமாஜ்வாடி கட்சி 160 இடங்களைப் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி 86 இடங்களுடன் இரண்டாவது இடத்தையும், 80 இடங்களுடன் பா.ஜ., மூன்றாவது இடத்தையும், 58 இடங்களுடன் காங்கிரஸ் 4வது இடத்தையும் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மிகவும் ஆவலுடன் கூட்டு வைத்த ராஷ்டிரிய லோக்தளம் 12 இடங்களை பிடிக்கும் எனவும் அந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
அதேவேளையில் முஸ்லிம்-யாதவர்கள் வாக்குகளை குறிவைத்து களமிறங்கியுள்ள சமாஜ்வாதி கட்சிக்கு 141 இடங்கள் கிடைக்கும் என்று இந்தியா டி.வி.,-சி- வோட்டர் எடுத்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. சமாஜ்வாடி கட்சி 137 முதல் 145 இடங்கள் வரை பிடிக்கும் என்று கூறும் அந்த கருத்துக்கணிப்பு பகுஜன் 122 முதல் 130 இடங்கள் வரை பெறலாம் என்றும் கூறுகிறது.
பா.ஜ.க., 79 முதல் 87 இடங்களையும், காங்., ராஷ்டிரிய லோக்தளம் 39 முதல் 55 இடங்களையும் இதர கட்சியினர் 2 முதல் 10 இடங்கள் பெறும் என கூறுகிறது.
தி ஹெட்லைன்ஸ் டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், சமாஜ்வாடி கட்சி 195 முதல் 210 இடங்களைப் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. பி.எஸ்.பி.,க்கு 88 முதல் 98 இடங்கள் வரையிலும், பா.ஜ.,வுக்கு 50 முதல் 56 இடங்கள் வரையிலும், காங்கிரஸ்-ராஷ்டிரிய லோக்தளம் 38 முதல் 42 இடங்கள் வரையிலும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அங்கு சுயேட்சைகள் 12 முதல் 18 இடங்களைப் பெறுவார்கள் எனவும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment