Wednesday, March 28, 2012

தமிழகத்தில் 87 சதவீத வீடுகளில் டி.வி! ஆனால் 52 சதவீத வீடுகளில் டாய்லெட் இல்லை!


தமிழகத்தில் 87 சதவீத வீடுகளில் டி.வி

சென்னை:இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முடிவடைந்ததையொட்டி நேற்று அதுதொடர்பான அறிக்கையை மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையின் தமிழ்நாடு மாநில இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் பெற்றுக் கொண்டார்.
மக்கள்தொகை அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் இப்போது 1 கோடியே 85 லட்சம் குடும்பங்கள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் 1.42 கோடி குடும்பங்கள் இருந்தன.
தற்போது, கூட்டுக் குடும்ப எண்ணிக்கை குறைந்து தனிக் குடித்தனம் அதிகரித்துள்ளது. 75 சதவீதம் பேர் தனிக் குடித்தனம் நடத்தி வருகின்றனர்.
மாநிலத்தில் மொத்தமுள்ள வீடுகளில் 44 சதவீதம் கான்கிரீட் வீடுகளாக உள்ளன. மண் சுவர் வீடுகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 33 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2001ம் ஆண்டில் 26 சதவீதம் பேர் கூரை வீடுகளில் இருந்தனர். தற்போது அது 15 சதவீதமாக குறைந்துள்ளது. சிமென்ட் தரையுடன் கூடிய வீடுகளின் எண்ணிக்கை, 55 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்ந்துள்ளன.
நீராதாரத்தைப் பொறுத்தவரை 79.8 சதவீத குடும்பங்கள் ஆழ்துழை கிணறுகள், குழாய் இணைப்புகள் ஆகியவற்றின் மூலம் குடிநீரை பெறுகிறார்கள். இதில் 35 சதவீதம் பேருக்கு வீட்டுக்குள்ளேயே குடிநீர் கிடைக்கிறது. 7 சதவீதம் பேர் குடிநீருக்காக அரை கி.மீ. தூரம் வரை செல்ல வேண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன் 12 சதவீதமாக இருந்தது.
64 சதவீதம் பேர், வீட்டு வளாகத்துக்குள் குளிக்கும் வசதியை கொண்டுள்ளனர். 50 சதவீத குடும்பத்தினர் கழிவு நீர் கால்வாய் இணைப்பு பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 52 சதவீத குடும்பங்கள் திறந்தவெளி கழிப்பிடங்களையே பயன்படுத்துகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன் இது 64 சதவீதமாக இருந்து, இப்போது 52 சதவீதமாகக் குறைந்துள்ளது. இப்போதும் 48.3 சதவீத குடும்பத்தினருக்கே வீட்டுக்குள் கழிப்பிட வசதி உள்ளது (தேசிய அளவில் இது 46.9 சதவீதமாகவே உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு பெட்டர்).
சென்னை 95 சதவீத வீடுகளிலும், கன்னியாகுமரியில் 87 சதவீத வீடுகளிலும் கழிப்பிடம் உள்ளது. ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் வெறும் 19 சதவீத வீடுகளிலும், அரியலூர் மாவட்டத்தில் வெறும் 18.1 சதவீத வீடுகளிலும் மட்டுமே கழிப்பிட வசதி உள்ளது. மற்றவர்கள் திறந்த வெளியையே கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.
93.4 சதவீத குடும்பங்களுக்கு மின்சார வசதி உள்ளது. 7 சதவீத வீடுகளில் மின் இணைப்பே இல்லை. 2001ம் ஆண்டு 78.2 சதவீத குடும்பங்களுக்கு மின் இணைப்பு இருந்தது. இப்போது அது 93 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 44 சதவீத வீடுகளில் டி.வி. இருந்தது. தற்போது அது கிட்டத்தட்ட இரண்டு மடங்காகி, 87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் டெல்லியில் தான் 92 சதவீத குடும்பங்களில் டிவி உள்ளது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
11 சதவீத வீடுகளில் கம்ப்யூட்டர் வசதி உள்ளது. 48 சதவீத வீடுகளில் சமையல் கியாஸ் பயன்படுத்துகிறார்கள். 32 சதவீதம் பேர் இரண்டு சக்கர வாகனங்களையும், 4 சதவீதம் பேர் 4 சக்கர வாகனங்களையும் பயன்படுத்துகிறார்கள்.
அதே நேரத்தில் தமிழகத்தில் 45 சதவீதம் பேர் சைக்கிள்களை பயன்படுத்துகிறார்கள்.
75 சதவீத வீடுகளில் தொலைபேசி இணைப்பு உள்ளது. இதில் 69 சதவீத இணைப்புகள் செல்போன்கள் ஆகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza