Wednesday, March 28, 2012

அணு ஆயுத பயங்கரவாதம் உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: மன்மோகன்சிங்!


PM at Nuclear Security Summit in Seoul

சியோல்:தவறான நோக்கங்களுக்காக அணு ஆயுதத் தொழில்நுட்பங்களையும் அதற்குத் தேவையான மூலப் பொருள்களையும் அடைவதற்கு பயங்கரவாதிகள் முயற்சி செய்து வரும்வரை, அணு ஆயுத பயங்கரவாதம் உலகின் அமைதிக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் என்று தென்கொரியாவில் நடைபெற்ற அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
தென் கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற்ற அணுசக்திப் பாதுகாப்பு உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங் ஆற்றிய உரையில் கூறியது:

அணு ஆயுத ஆபத்து குறித்து இந்தியா முழுமையாக உணர்ந்திருக்கிறது. பேரழிவு ஆயுதங்களை பயங்கரவாதிகள் பெற்றுவிடாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக 2002-ம் ஆண்டில் ஒரு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியா கொண்டுவந்தது. இந்தத் தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ரசாயன, உயிரி, கதிரியக்க, அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காக சட்ட ரீதியிலான மற்றும் ஒழுங்காற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது.
ராஜீவ் காந்தியின் திட்டம்: 25 ஆண்டுகளுக்கு முன்பே இது தொடர்பாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒரு செயல் திட்டத்தை முன்வைத்தார். பேரழிவு ஆயுதங்களை ஒழிக்கும் இலக்கை எட்டுவதற்கு இன்றைக்கும் பொருத்தமான, விரிவான திட்டம் அது.
இப்போது நடந்து வரும் அணுசக்திப் பாதுகாப்பு உச்சி மாநாட்டு நடைமுறைகளுக்கு இந்தியா ஆக்கப்பூர்வமான பங்களிப்பைச் செய்திருக்கிறது. அணுசக்திப் பாதுகாப்பு என்பது தேசிய அளவிலான பொறுப்புதான் என்றாலும், சர்வதேச ஒத்துழைப்புடன் இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கும்போதுதான் பல நன்மைகள் கிடைக்கின்றன.
அணுசக்திப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சர்வதேச உடன்பாடுகளில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. இதுபோன்ற உடன்பாடுகளை அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக்குவது அவசியம்.
அணு ஆயுதங்களை வைத்திருக்கும் அனைத்து நாடுகளும் உறுதியளிக்கும் வகையிலான பலதரப்பு உடன்பாடுகள் மூலமே அணுஆயுதமற்ற உலகத்தை உருவாக்க முடியும். பாதுகாப்புக் கோட்பாடுகளுக்குள் அணு ஆயுதங்களைக் கொண்டுவரும் போக்கைக் குறைப்பது, அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது உள்ளிட்ட அம்சங்கள் இந்த உடன்பாடுகளில் இடம்பெற வேண்டும்.
ஆபத்தான தொழில்நுட்பங்களைப் பரப்பும் செயலை இந்தியா ஒருபோதும் செய்ததில்லை. அணு எரிபொருள் வழங்கும் நாடுகள் குழு, ஏவுகணைத் தொழில்நுட்ப கட்டுப்பாட்டுக் குழுமம், வாஸனார் அமைப்பு, ஆஸ்திரேலியக் குழு போன்ற ஆயுத ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இந்தியா ஏற்கெனவே இணங்கி நடந்து வருகிறது. இந்த 4 அமைப்புகளிலும் இந்தியா உறுப்பினராக வேண்டும் என்பதுதான் இதற்கு அடுத்த படியாக இருக்க முடியும்.
சர்வதேச அணுசக்தி முகமையின் செயல்பாட்டுக்காக 2012-13ம் ஆண்டுகளுக்கு இந்தியாவின் பங்களிப்பாக ரூ.5 கோடி நிதி அளிக்க இருக்கிறோம்.
அணுசக்தியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் வகையில் பல்வேறு வளரும் நாடுகளுக்கு தொழில்நுட்பஉதவிகளை இந்தியா அளித்து வருகிறது. புற்றுநோயைக் குறைந்த செலவில் குணப்படுத்துவதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட “பாபாட்ரான்ஸ்’ என்கிற கோபால்ட் சிகிச்சை இயந்திரங்களை வளரும் நாடுகளுக்கு வழங்கி வருகிறோம்.
2008-ம் ஆண்டில் வியட்நாமுக்கு இந்த இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இலங்கை, நமீபியா ஆகிய நாடுகளுடன் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன.இந்தியாவில் உள்ள அணுசக்தித் திட்டங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றை ஆய்வு செய்வதற்கு அணுசக்தி முகமையின் பாதுகாப்பு ஆய்வுக் குழுவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம்.
அணுசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக தன்னிச்சையாக இயங்கும் ஒழுங்காற்று ஆணையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அணு விபத்துகளை எதிர்கொள்வதற்குத் தேவையான அவசரகால தயார்நிலையை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றார் மன்மோகன் சிங்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza