வள்ளியூர்:மாநில அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகம் அளித்த உறுதிகளை ஏற்று, இடிந்தகரையில் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த உதயகுமார் தலைமையிலான அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். எனினும், அணு உலைக்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் கூறுகின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை தமிழக அமைச்சரவை திறக்க முடிவுச்செய்தது. இதனைத் தொடர்ந்து அணு உலை எதிர்ப்பாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மற்றும் அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது ஆகியவற்றைக் கண்டித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் குழு தலைவர் எஸ்.பி.உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்ட 15 பேர் இடிந்த கரையில் கடந்த 19-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 நாள்களாக உண்ணாவிரதம் இருந்த உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோரின் உடல்நிலை மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்துக்கும், கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரு தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக் கூட்டம் ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் இரா. செல்வராஜ், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. வரதராஜு, எஸ்.பி. விஜயேந்திர பிதரி உள்ளிட்டோரும், போராட்டக் குழு சார்பில் தமிழர் களம் மாநிலச் செயலர் அரிமா வளவன் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது, போராட்டக்குழு சார்பில் அரசுக்கு 7 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு முன்வைத்த கோரிக்கைகள்:
* போலீஸாரால் கைது செய்யப்பட்ட அணு உலை எதிர்ப்பாளர்களை விடுவிக்க வேண்டும்.
* போராட்டக்குழுவினர் மீதான வழக்குகள் அனைத்தையும் நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும்
* நிலவியல், நீரியல், கடலியல் தொடர்பாக தமிழக மற்றும் இந்திய நிபுணர்கள் ஆய்வு செய்து அறிவித்த தகவல்களின்படி தங்களால் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த உண்மைத் தன்மையை அறிய உண்மையான, நேர்மையான குழுவை நியமிக்க வேண்டும்; சர்வதேச தரத்தில் சுதந்திரமான முறையில் அந்தக் குழு ஆய்வினை மேற்கொள்ள வழிவகுக்க வேண்டும்;
* அணு உலை விபத்து காப்பீடு தொடர்பாக இந்தியா – ரஷியா இடையிலான ரகசிய ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும்;
* அணுக்கழிவு மேலாண்மை தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிட வேண்டும்.
* கூடங்குளம் அணு மின் நிலையத்தை போராட்டக்காரர் முற்றுகையிடவோ, அதன் பணியாளர்களுக்கு இடையூறு செய்யவோ மாட்டார்கள். அதேவேளையில், ஜனநாயக முறைப்படி கருத்துப் பரப்புரைகளைச் செய்யவும், அறப் போராட்டங்களை நடத்தவும் அனுமதிக்க வேண்டும்.
* தங்களின் இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவதோடு, மக்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு மாநில அரசு தெரியப்படுத்த வேண்டும்.
போராட்டக்குழுவின் இந்தக் கோரிக்கைகள், மாவட்ட கலெக்டர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்டது.
144 தடை உத்தரவு வாபஸ்:
பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த மாவட்ட ஆட்சியர் இரா. செல்வராஜ் கூறியதாவது:
பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தது. அணுஉலை அமைந்துள்ள பகுதியைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் 144 தடை உத்தரவு உடனடியாக வாபஸ் பெறப்படுகிறது. அணுஉலை பகுதியில் மட்டும் தடை உத்தரவு நீடிக்கும். வழக்குகளை வாபஸ் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. அரசிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார் ஆட்சியர்.
போராட்டக் குழுவினர் இடிந்தகரைக்குச் சென்று, பேச்சுவார்த்தை விவரங்களை விளக்கினர். அதிகாரிகளின் உறுதிமொழிகளை ஏற்று, காலவரையற்ற உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவது எனவும், சிறையில் உள்ள போராட்டக் குழுவினர் வெளியே வரும் வரை தொடர் உண்ணாவிரதத்தைத் தொடருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
உதயகுமாருக்கு மதுரை பேராயர் பீட்டர் பெர்னாண்டோ பழரசம் கொடுத்து இரவு 7 மணியளவில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
காலவரையற்ற உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்ட போதிலும், அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடரும்; உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் என அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் கூறினார்.
திரண்டிருந்த மக்கள் மத்தியில் உதயகுமார் கூறியது:
அணு உலைக்கு எதிரான அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும். அணு உலை தொடர்பான நிலவியல், நீரியல், கடலியல் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறோம். தமிழக அரசு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளது. சற்று பொறுமையாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. சிறையில் உள்ள நமது தோழர்கள் வரும்வரை மீனவர்கள் கடலுக்குப் போகமாட்டார்கள். கடைகள் திறக்காது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்லமாட்டார்கள். நமது உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்கும் என நம்புகிறேன் என்றார் உதயகுமார்.
0 கருத்துரைகள்:
Post a Comment