புதுடெல்லி:காங்கிரஸ் கட்சிக்கும், தேர்தல் கமிஷனுக்கும் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. தேர்தல் தொடர்பான நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் அதிகாரத்தை தேர்தல் கமிஷனிடம் இருந்து பறிக்க முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. தேர்தல் கமிஷனின் அதிகாரத்தை பறிப்பதற்கான முயற்சியை கடுமையாக எதிர்ப்போம் என்று பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.
சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், முஸ்லிம்களுக்கான உள்ஒதுக்கீடு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அவரது பேச்சுக்கு தேர்தல் கமிஷன் எதிர்ப்பு தெரிவித்தது.
சல்மான் குர்ஷித் மீதான சர்ச்சை ஓய்வதற்குள் மற்றொரு மத்திய அமைச்சரான வேணி பிரசாத் வர்மா சர்ச்சையில் சிக்கினார். இப்படி காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் பலரும் தேர்தல் கமிஷனின் கெடுபிடி நடவடிக்கையில் சிக்கியிருப்பது அக்கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிலையில் தேர்தல் கமிஷனின் அதிகாரத்தை பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படியொரு தகவல் வெளியாகியுள்ளது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரைஷி கூறுகையில், இதைப் பார்க்கும் போது தேர்தல் கமிஷனின் அதிகாரத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது என்றார். ஒருவேளை தேர்தல் நடத்தை விதிமுறையை அமல்படுத்தும் அதிகாரம் தேர்தல் கமிஷனிடம் இருந்து பறிக்கப்பட்டு நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்டால் அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம்தான். அவர்கள் துணிந்து தேர்தல் நடத்தை விதிமுறையை மீறுவார்கள். ஏனென்றால் தவறு செய்யும் அரசியல்வாதிகள் மீதான வழக்கு பல ஆண்டுகள் நடந்து கொண்டிருக்கும். அதுவரை அவர்கள் அதிகாரத்தை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள் என்றும் குரைஷி கூறினார்.
தேர்தல் கமிஷனின் அதிகாரத்தைப் பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதற்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
அத்துறை செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் கமிஷனின் அதிகாரப் பறிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல் முழுக்க முழுக்க விஷமத்தனமானது. அதில் எவ்வித உண்மையும் கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதன்கிழமை நடைபெறவுள்ள அமைச்சர்கள் குழு கூட்டத்தில் தேர்தல் கமிஷனின் அதிகாரத்தைப் பறிப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவலும் பொய்யானது. இப்படியொரு திட்டம் மத்திய அரசிடமோ, மத்திய அமைச்சர்கள் குழுவிடமோ இல்லை என்றும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை தெளிவுபடுத்தியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment