Wednesday, February 22, 2012

சஞ்சீவ் பட் மனு தள்ளுபடி

sanjeev
ஜாம்நகர்:போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் மருத்துவமனையில் மரணமடைந்ததாக கூறப்படும் குற்றவாளி ஒருவரின் மரணம் தொடர்பான வழக்கில் குஜராத் மாநில மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனுவை மாவட்ட நீதிமன்றம் ஒன்று தள்ளுபடிச் செய்துள்ளது.

கோத்ரா ரெயில் எரிப்பை தொடர்ந்து ஹிந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று உயர்போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி உத்தரவிட்டார் என்று பிரமாணப்பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் சஞ்சீவ் பட் தாக்கல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி சஞ்சீவ் பட் மீது பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ந்து வருகிறார். ஏற்கனவே பட் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியிருந்தது.

இந்நிலையில் குற்றவாளி ஒருவர் மருத்துவமனையில் இறந்தது தொடர்பான வழக்கில் சஞ்சீவ் பட் மீது நடவடிக்கை எடுக்க மோடி மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

1990-ல் நடந்த ஒரு இனக்கலவரத்தை தொடர்ந்து இவரால் கைது செய்யப்பட்ட பிரபுதாஸ் வைஷ்னானி என்பவர் போலீஸார் விடுவித்த சில நாள்களில் மருத்துவமனையில் திடீரென்று உயிரிழந்தார்.

தன் சகோதரரின் சாவில் மர்மம் இருப்பதாக வைஷ்னானியின் சகோதரர் அம்ருத்லால் வழக்கு தொடர்ந்தார். இதில் சஞ்சீவ் பட் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கடமையைச் செய்யும்போது நடந்த சம்பவம் என்ற நிலைப்பாட்டை அப்போதைய மாநில அரசு எடுத்தது.

ஆயினும் கடந்தாண்டு ஜூலை மாதம் இந்தப் பரிந்துரையை மாநில அரசு விலக்கிக் கொண்டது. இதனால் சஞ்சீவ் பட் மீது வழக்கு தொடுப்பதில் மாநில அரசுக்கு ஆட்சேபமில்லை என்பதால் அவர் மீது பாதிக்கப்பட்டவர் சார்பாகத் தொடர் நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அம்ருத்லால் தொடர்ந்த வழக்கு குறித்து மறுபரிசீலனை செய்வதற்கு, தான் காலம் தாழ்த்தி மனு செய்ததை மன்னிக்குமாறு சஞ்சீவ் பட் மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு செவ்வாய்கிழமை நிராகரிக்கப்பட்டது. இதனால் வைஷ்னானி மர்ம சாவு குறித்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது. மாவட்ட நீதிபதி உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாக சஞ்சீவ் பட்டின் வழக்குரைஞர் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza