Monday, February 6, 2012

சிரியாவுக்கு ஆதரவாக வீட்டோ: எதிர்ப்பு வலுக்கிறது

russia and china veto to syria

டமாஸ்கஸ்:அரபு-மேற்கத்திய நாடுகள் தயார் செய்த நகல் தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ செய்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

11மாதங்களாக சிரியாவில் தொடரும் போராட்டத்திற்கிடையே இரண்டாவது தடவையாக இரு நாடுகளும் வீட்டோ செய்துள்ளன. பஸ்ஸாருல் ஆஸாத் என்ற சர்வாதிகாரி அப்பாவி மக்கள் மீது நடத்தி வரும் அக்கிரம தாக்குதல்களை தொடரும் வேளையிலும் சிரியாவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காத இரு நாடுகளின் நடவடிக்கை கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

தடைகளுக்கோ,ராணுவ நடவடிக்கைகளுக்கோ சிபாரிசு செய்யாத இந்த தீர்மானம், பஸ்ஸாருல் ஆஸாத் பதவி விலகி ஜனநாயக நடைமுறைக்கு வழிவகைச் செய்யவேண்டும் என கோருகிறது. 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனா தவிர இந்தியா உள்பட 13 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. நேற்று முன் தினம் சிரியாவின் ஹும்ஸ் நகரம் குருதிகளமாக மாறியது. 200 பேர்கள் கொல்லப்பட்டனர்.

சிரியாவுக்கு தூதரக ரீதியாக பாதுகாப்பு அளிப்பதுதான் ரஷ்யா மற்றும் சீனாவின் வீட்டோ என நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மனித உரிமை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் சீனாவின் நடவடிக்கை அரபு லீக்கையும், சிரியா மக்களையும் அவமானப்படுத்துகிறது என அந்த அமைப்பு மேலும் கூறியது. வீட்டோ தன்னை வருத்தமடையச் செய்ததாக மொரோக்கோவின் தூதர் முஹம்மது லவ்லிச்கி தெரிவித்துள்ளார். ஆனாலும், அரபு திட்டத்தை கைவிடமாட்டோம் என அவர் கூறினார்.

இனி சிரியாவில் சிந்தப்படும் மனித குருதிக்கு பொறுப்பாளர்கள் ரஷ்யாவும், சீனாவும்தான் என ஐ.நாவில் அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் கருத்து தெரிவித்துள்ளார். ரஷ்யாவும், சீனாவும் சிரியா மக்களை ஏமாற்றிவிட்டன என பிரிட்டீஷ் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். சொந்த விருப்பங்களுக்காக இரு நாடுகளும் சிரியாவை ஆதரிக்கின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.

ஹும்ஸில் நடந்த மனித வேட்டைக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியா மக்களின் நிலை மிகவும் வேதனையானது என ஒபாமா கூறியுள்ளார். அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் பதவி விலகி ஜனநாயகத்திற்கு வழி விடவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நகல் தீர்மானத்தை எதிர்த்த வீட்டோ, சிரியா மக்களுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும், மனித உரிமை-ஜனநாயக அமைப்புகளுக்கும் கிடைத்த தோல்வி என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் கருத்து தெரிவித்துள்ளார்.

வீட்டோ, சிரியாவில் தாக்குதல்கள் தொடருவதற்கான சூழல்களை உருவாக்கும் என்றும், தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளையில் பல்வேறு நாடுகளில் சிரியா தூதரகத்தின் முன்பாக போராட்டங்கள் நடைபெற்றன. ஆஸ்திரேலியாவில் சிரியா தூதரகத்தை எதிர்ப்பாளர்கள் தாக்கினர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza