டெஹ்ரான்:18 மாதங்களாக தொடரும் அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடையை தொடர்ந்து ஈரானின் பொருளாதார கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரான், ஆசிய நாடுகளை அதிகமாக நாடத் துவங்கியுள்ளது. ஆசிய நாடுகளில் சீனா, ஈரானுக்கு பாதுகாப்பு கவசமாக மாறியுள்ளது.
சீனா,ஈரானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக மாறிவிட்டது. வருடந்தோறும் 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான வெளிநாட்டு வர்த்தகத்தை ஈரான் நடத்திவந்தது. முன்னர் இதில்90 சதவீதமும் ஐரோப்பிய நாடுகளில் நடந்தது. ஆனால், தற்போது 2300 முதல் 2400 கோடி வரையிலான வர்த்தகம் மட்டுமே ஐரோப்பிய நாடுகளுடன் நடப்பதாக தடை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் பதிலடி கொடுத்து இருந்தார்.
“எங்களின் அணு சக்தி திட்டத்தை தடுப்பதற்கு நிர்பந்தம் அளிக்க ஏற்படுத்திய தடைகள் ஈரானின் உலகத்தை சிறிது கூட சுருக்கிவிடவில்லை” என நஜாத் கூறினார்.
நடப்பு நிதியாண்டில்10 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெயையும், 4500 கோடி டாலர் மதிப்பிலான எண்ணெய் இதர உற்பத்திகளையும் ஈரான் ஏற்றுமதி செய்யும் என கருதப்படுகிறது. 5500 கோடி டாலர் மதிப்பிலான இறக்குமதியையும் இக்காலக்கட்டத்தில் ஈரான் எதிர்பார்க்கிறது. இருந்தாலும் கூட பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் சீனாவுக்கு அடுத்து அதிகமாக ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவது மேற்கத்திய நாடுகளாகும்.
ஈரானின் மொத்த ஏற்றுமதியில் 20 சதவீதமும் ஐரோப்பிய நாடுகளுடன் நடைபெறுகிறது. அதேவேளையில் 70 சதவீதம் ஆசிய நாடுகளுடன் நடைபெறுகிறது.
சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதிச் செய்யப்படுகிறது. சீனாவும்,இந்தியாவும் இணைந்து ஈரானின் ஏற்றுமதியில் 40 சதவீதத்தை வாங்குகிறது. அமெரிக்கா-ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடை மூலம் ஈரானில் இருந்து இறக்குமதிக்கான பணம் அளிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை சமாளிக்கும் முயற்சியில் இந்தியாவும், சீனாவும் ஈடுபட்டு வருகின்றன.
2010,2011 வருடங்களில் ஈரான்- சீனா வர்த்தகத்தில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. 2011ஆம் ஆண்டு தென்கொரியாவுடனான வர்த்தகத்தில் 61 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment