ஹவானா:நீண்டகாலத்திற்கு பிறகு முன்னாள் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ பொது மேடையில் தோன்றினார். ஃபிடலின் நினைவுக் குறிப்புகள் அடங்கிய புத்தக வெளியீட்டு விழாவில் ஒன்பது மாத இடைவேளைக்கு பிறகு அவர் கலந்துகொண்டார்.
ஆயிரம் பக்கங்களை கொண்ட இரண்டு வால்யூம்களான ஃபிடலின் நினைவுக் குறிப்புகளுக்கு ‘டைம் கொரில்லா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தனது பால்ய வயது முதல், கியூபா புரட்சி, இறுதியாக கியூபாவின் ஆட்சியாளராக மாறியது வரையிலான நிகழ்வுகள் இரண்டு வால்யூம்களை கொண்ட நினைவுக் குறிப்புகளில் இடம் பெற்றுள்ளன.
பத்திரிகையாளரான கத்யூஸ்கா ப்ளாங்கா என்பவர் இந்த நினைவுக் குறிப்புகளை தயார் செய்துள்ளார். ப்ளாங்காவின் கேள்விகளுக்கு ஃபிடல் காஸ்ட்ரோ அளிக்கும் பதில் மூலமாக அவருடைய நினைவுகள் மலருகின்றன. ஃபிடலின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும் ப்ளாங்கா ஆவார்.
ஹவானாவில் உள்ள கன்வென்சன் பேலஸில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கியூபாவின் கலாச்சார துறை அமைச்சர் ஆபேல் ப்ரிட்டோ, எழுத்தாளர் அமைப்பின் தலைவர் மிகுல் பார்னெட், கத்யூஸ்கா ப்ளாங்கா ஆகியோர் பங்கேற்றனர்.
“எனது நினைவுகளையும், அனுபவங்களையும் புதிய தலைமுறைக்கு அளிப்பதற்கு எதனை செய்யவும் நான் தயார். இது காஸ்ட்ரோ என்ற தனி மனிதனுக்கு மட்டும் சொந்தமான நினைவுகள் அல்ல. இந்த நாட்டிற்காக(கியூபா) போராடிய ஒரு தலைமுறையின் நினைவுகளாகும். இந்நாட்டின் நினைவுகளாகும்.” என ஃபிடல் காஸ்ட்ரோ உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
2011 ஏப்ரல் மாதம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காஸ்ட்ரோ பின்னர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது.
0 கருத்துரைகள்:
Post a Comment