நாக்பூர்:ஹிந்துத்துவா கட்சியான பா.ஜ.கவும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கும் கூட்டணி வைத்துள்ளன. நாக்பூர் மாநகராட்சியில் இந்த விசித்திரமான முஸ்லிம் சமுதாயத்தின் வெறுப்பை சம்பாதிக்கும் நடவடிக்கையாக முஸ்லிம் லீக்கின் உறுப்பினர்கள் ஹிந்துத்துவா அரசியல் கட்சியான பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.
இதனால் 145 உறுப்பினர்களை கொண்ட நாக்பூர் மாநகராட்சியில் 62 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.கவுக்கு மாநகராட்சியை ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முஸ்லிம் லீக்கின் இஷ்ரத் அன்ஸாரி, அஸ்லம் கான் ஆகியோர் சங்க்பரிவாரின் அரசியல் கட்சியுடன் மாநகராட்சி ஆட்சியில் பங்காளிகளாக மாறியுள்ளனர்.
முஸ்லிம் லீக்கை தவிர பாரிபா பகுஜன் மஹா சங்க், லோக் பாரதி பார்டி, ரிபப்ளிகன் ஏகதா மஞ்ச் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களுடன் ஒன்பது சுயேட்சை உறுப்பினர்களும் பா.ஜ.க தலைமையிலான நாக்பூர் விகாஸ் அகதி(என்.வி.எ) முன்னணியில் இடம் பெற்றுள்ளனர்.
12 உறுப்பினர்களை கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவை பெற பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் அவை தோல்வியை தழுவின. ஆறு உறுப்பினர்களை கொண்ட சிவசேனா கட்சி கூட்டணியில் இடம் பெறவில்லை என்றாலும், வெளியே இருந்து ஆதரிப்பார்கள் என கூறப்படுகிறது.
மார்ச் 5-ஆம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 41 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி அந்தஸ்தை வகிக்கிறது. கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. முஸ்லிம் லீக்கை மதவாத கட்சி என்று அழைக்கும் பா.ஜ.கவும், பா.ஜ.கவை பாசிஸ்டு கட்சி என்று அழைக்கும் முஸ்லிம் லீக்கும் ஒன்றிணைந்தது அரசியல் விமர்ச்கர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது. ஆனால், வெளியே உள்ளவர்களுக்கு ஆச்சரியம் தோன்றினாலும், இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்று கூறுகிறார் பா.ஜ.கவின் மூத்த மாநகராட்சி உறுப்பினரும், என்.வி.எ கூட்டணியின் கண்வீனருமான அனில் சோலா. காரணம் கடந்த ஊராட்சி, சட்டப்பேரவை தேர்தல்களிலும் முஸ்லிம் லீக் தங்களின் கூட்டணி கட்சிப் போலவே ஒத்துழைத்து பணியாற்றியது என்கிறார் அவர்.பா.ஜ.க எம்.எல்.ஏவான தேவேந்திர ஃபட்னாவிசும் இதனை உறுதிச்செய்கிறார்.
முஸ்லிம் வாக்குகள் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் நாக்பூர் சென்ட்ரல், நாக்பூர் வெஸ்ட் ஆகிய தொகுதிகளில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றனர். பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரியின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி ஏற்பட்டுள்ளதாம்.
2014-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் கட்கரி முதன் முதலாக தேர்தல் களத்தில் நாக்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ளார். இதில் முஸ்லிம் வாக்குகளை தனக்கு ஆதரவாக மாற்றுவதற்கு முஸ்லிம் லீக்குடன் கூட்டணி வைத்துள்ளதாக கருதப்படுகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment