சென்னை:நேற்று முன்தினம் சென்னையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக 5 பேரை தமிழ்நாடு போலீஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து 8 வாரங்களுக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று தமிழ்நாடு டி.ஜி.பி, சென்னை மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு தேசிய மனித உரிமை கமிஷன்(என்.சி.ஹெச்.ஆர்.சி) நேற்று(வெள்ளிக்கிழமை) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்று கமிஷன் கோரிக்கை விடுத்துள்ளது.
வாராணசியில் வசிக்கும் மனித உரிமை ஆர்வலர் லெனின் ரகுவன்ஷி மனித உரிமை கமிஷனுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மனித உரிமை கமிஷன் மேற்கொண்டுள்ளது.
“துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக தமக்கு சந்தேகம் எழுகிறது. இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும்” என்று அவர் கமிஷனுக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தையும் ஊடகங்களில் வெளியான செய்திகளையும் புகாராக தேசிய மனித உரிமை கமிஷன் வெள்ளிக்கிழமை பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை குறித்து தமிழக போலீஸ் டிஜிபி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஆகியோர் எட்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
பதில் கடிதத்துடன், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை, உயிர் இழந்த 5 பேரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, அந்தச் சம்பவம் தொடர்பாக மாநில அரசு நியமித்துள்ள வேறு அமைப்புகளின் விசாரணை அறிக்கை போன்றவற்றையும் தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமைகள் மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள வீடு ஒன்றை சுற்றி வளைத்த போலீசார் ஐந்து பேரை சுட்டுக் கொன்றனர். பீகாரைச் சார்ந்த தொழிலாளர்களான சந்திரிகா ராய், ஹரீஷ் குமார், வினய் பிரசாத், வினோத் குமார், மேற்குவங்காளத்தைச் சார்ந்த அபய்குமார் ஆகியோர் இந்த என்கவுண்டரில் படுகொலைச் செய்யப்பட்டனர். இச்சம்பவம் போலி என்கவுண்டர் என்றும், கொள்ளைக் கும்பலை பிடிக்க போலீஸ் எவ்வித முயற்சியிலும் ஈடுபடவில்லை என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
போலீசாரின் நடவடிக்கை சந்தேகத்தை எழுப்புவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். என்கவுண்டர் நடந்ததாக கூறப்படும் வீட்டின் வாசலை உடைத்து உள்ளே நுழைந்ததாக போலீஸ் கூறுகிறது. சம்பவ இடத்தை பார்வையிட்ட மனித உரிமை ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் இதனை மறுக்கின்றனர். வீட்டின் கதவுக்கு சேதம் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். வீட்டில் ஐந்து பேர் மட்டுமே தங்கியிருந்த வேளையில் 14 பேர் அடங்கிய போலீஸ் குழு மேலும் போலீசாரை அனுப்ப கோரி அவர்களை கைது செய்ய முயற்சி செய்யாதது குறித்தும் மர்மம் நிலவுகிறது.
கொலைச் செய்யப்பட்டவர்களில் முன்னர் நகரத்தில் நடந்த கொள்ளையில் தொடர்புடைய நபர் ஒருவர் மட்டுமே அடங்குவார். இதர நான்குபேர் மீது ஏதேனும் வழக்குகளில் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.
போலீசாரின் இந்த அடாவடித்தனமானம், அராஜகமான நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஐந்து பேரையும் கைது செய்து என்கவுண்டர் நடவடிக்கையை தவிர்த்திருக்கலாம் என்றும், என்கவுன்டர் படுகொலையில் ஈடுபட்ட அனைத்து போலீஸ்காரர்கள் மீதும் கொலைக் குற்றம் சுமத்தவேண்டும் என்றும் பிரபல மனித உரிமை ஆர்வலர் அ.மார்க்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment