புதுடெல்லி:குஜராத் மாநிலத்தில் நடந்த போலி என்கவுண்டர் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை கண்காணிக்கும் கண்காணிப்புக் குழுவுக்கு புதிய தலைவரை நியமித்த மோடி அரசின் நடவடிக்கையை குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீதிமன்றத்திடம் கலந்தாலோசிக்காமல் இத்தகையதொரு தீர்மானம் எடுத்த மோடி அரசு மீது கடுமையான அதிருப்தியை உச்சநீதிமன்றம் வெளியிட்டது.
2002-06 காலக்கட்டங்களில் குஜராத் மாநிலத்தில் நடந்த 22 போலி என்கவுண்டர்கள் குறித்த விசாரணையை கண்காணிக்கும் பொறுப்பை வகிக்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.டி.ஷா அண்மையில் பதவி விலகியிருந்தார். இதனைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் முதன்மை நீதிபதி கே.ஆர்.வியாஸை தலைவராக மோடி அரசு நியமித்தது. நீதிபதிகளான அஃப்தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் குஜராத் மோடி அரசின் இந்நடவடிக்கையை குறித்து கேள்வி எழுப்பியது.
கண்காணிப்பு குழுவிற்கு தலைவராக நீடிக்க முன்னாள் நீதிபதி எம்.டி.ஷா மறுத்துவிட்டதாலும், விசாரணை தொடர்பான இடைக்கால அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாலும் வியாஸை தலைவராக நியமித்ததாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரான ரஞ்சித் குமார், குஜராத் கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் தெரிவித்தனர். ஆனால், கண்காணிப்புக் குழுவுக்கு புதிய தலைவரை நியமிக்கும்போது தங்களை கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற பெஞ்ச் கூறியது.
போலி என்கவுண்டர்கள் தொடர்பாக சி.பி.ஐ போன்ற சுதந்திர ஏஜன்சிகளின் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மூத்த பத்திரிகையாளர் பி.ஜி.வெர்கா, கவிஞரும், பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் ஆகியோர் பொது நலன் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்தனர். இம்மனுக்களை விசாரணைக்கு எடுத்த வேளையில் உச்சநீதிமன்ற பெஞ்ச் மோடி அரசு மீதான அதிருப்தியை வெளியிட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment