Monday, February 6, 2012

உ.பி:முஸ்லிம் வாக்குவங்கி மோசடிக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ பிரச்சாரம்

sdpi
புதுடெல்லி:முஸ்லிம் வாக்குவங்கியை குறிவைத்து முக்கிய அரசியல் கட்சிகள் நடத்தும் மோசடிக்கு எதிராக போராட்ட அரசியலுடன் ஹிந்தியின் இதய பூமியான உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவும் களமிறங்கியுள்ளது. கூட்டணி கட்சியான அம்பேத்கர் சமாஜ் பார்டியும், எஸ்.டி.பி.ஐயும் இணைந்து 110 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. 10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகமான முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் முஸ்லிம் சமுதாயத்தை வாக்குவங்கியாக மட்டுமே கருதிவரும் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் மோசடிக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ பிரச்சாரம் நடத்திவருகிறது. ஹிந்துத்துவா வகுப்புவாத வெறியை உமிழும் பா.ஜ.கவை எதிர்ப்பதுடன், பா.ஜ.கவை காட்டி முஸ்லிம்களை அச்சமூட்டி தங்களுக்கு ஆதரவாக மாற்றும் அரசியலையும் எஸ்.டி.பி.ஐ எதிர்க்கிறது.

முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் தலித்-பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்தையும் நோக்கமாக கொண்டு பிரச்சாரம் நடந்துவருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டுள்ள முஸ்லிம்களும், தலித்-பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்ற செய்தியை எஸ்.டி.பி.ஐ அளித்துவருகிறது.

எஸ்.டி.பி.ஐ உ.பி மாநில தலைவர் வழக்கறிஞர் ஷரஃபுத்தீன் அஹ்மத் போட்டியிடும் கான்பூர் மாவட்டத்தில் ஆர்யா நகர் தொகுதியில் தீவிரமான பிரச்சாரம் நடைபெறுகிறது.

முஸ்லிம் வாக்குகள் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் தேவ்பந்த் தொகுதியில் மவ்லானா மஸ்ஊதும், திஜிநூர் தாம்பூர் தொகுதியில் அப்துல் காலிதும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்கள். பட்ரோணாவில் முஹ்யத்தீன் சித்தீகி, ராம்பூர் மனிஹராவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பல்வந்த்சிங் சார்வாக், கான்பூர் ஸீஸாமில் ஷக்கீல் அஹ்மது முஹம்மதி, ஷாமிபூரில் ஷஃபாத் கான், முஸாஃபர் நகர் புதானாவில் மவ்லானா ஷக்தாப், முராதாபாத் டாக்கூர் துவாராவில் ரயீஸ் அஹ்மத் ஆகியோர் கடும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்கள்.

உத்தரபிரதேச மாநில தேர்தலில் முதன் முறையாக போட்டியிடும் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டவேண்டும், வளர்ச்சிக்காக உ.பியை நான்காக பிரிக்கவேண்டும், சிறுபான்மை கல்வியை அனைவருக்கும் பொதுவாக்க வேண்டும், குடிசை தொழிலுக்கு ஊக்கமளிக்க வேண்டும், பாரம்பரிய தொழில்களுக்கு முக்கியத்துவம் அளித்தல், போலி என்கவுண்டர் படுகொலைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை தேர்தல் களத்தில் முன்வைத்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza