புதுடெல்லி:அன்னா ஹஸாரேயின் நன்றிக் கெட்டத் தனத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கண்டனம் தெரிவித்துள்ளார். ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் முக்கிய பங்கை வகித்தபோதும் அதனை ஹஸாரே அங்கீகரிக்கவில்லை என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் சர் சங்க் சாலக்கின் கோபத்திற்கு காரணமாம். பாட்னாவில் அன்னா ஹஸாரேயை கடுமையாக விளாசினார் பாகவத்.
அவர் கூறியது:
“ஊழலுக்கு எதிராக அன்னா ஹஸாரே தேசம் தழுவிய அளவில் நடத்திய போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தீவிரமாக பங்கேற்றனர். ஆனால் ஏன் ஹஸாரே இதனை அங்கீகரிக்க முன்வரவில்லை என்பது குறித்து எனக்கு புரியவில்லை. தேசம் முழுவதும் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்த கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றி போதும் அன்னா ஹஸாரேயின் இயக்கத்தில் ஓர் அமைப்பு என்ற நிலையில் ஆர்.எஸ்.எஸ் அதிகாரப்பூர்வமாக சேரவில்லை.
ஆர்.எஸ்.எஸ் அதிகாரப்பூர்வமாக கட்டளை பிறப்பிக்காவிட்டாலும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தனிப்பட்ட ரீதியில் ஹஸாரேயின் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்க சுதந்திரம் அளிக்கப்பட்டது. ஆனால் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வகித்த பங்கினை அங்கீகரிக்க ஹஸாரே தயாராகவில்லை. ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவை பெற்றதற்கு காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்தை சந்தித்ததால் அவர் இவ்வாறு நடந்திருக்கலாம்.
நிதின் கட்கரியை பா.ஜ.க தலைவராக நியமித்தது ஆர்.எஸ்.எஸ் அல்ல. 2009-ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பிறகு ராஜ்நாத் சிங்கை மாற்றக்கோரி பா.ஜ.க தலைவர்கள் என்னை சந்திக்க வந்தனர். ஆகையால் பேச்சுவார்த்தைக்கான களத்தை உருவாக்கி கொடுத்தோம். பா.ஜ.க தலைவர்கள் பரிந்துரைத்த பல பெயர்களில் கட்கரியும் அடங்குவார். ஹிந்து பயங்கரவாதம் என ஒன்று கிடையாது. தீவிரவாத வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வகுப்புவாத நிறத்தை அளிக்கும் முன்பு வழக்கை நிரூபிக்கவேண்டும்.” இவ்வாறு மோகன் பாகவத் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment