சென்னை:சென்னை பாரிமுனை பள்ளிக்கூட ஆசிரியை ஒருவரை மாணவன் பள்ளிக்கூடத்தில் வைத்து கத்தியால் குத்தி கொலைச் செய்துள்ளான். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாரிமுனை அரண்மனைக்கார தெருவில் செயின்ட் மேரீஸ் மேல்நிலை தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி 150 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆயிரத்து 500 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சென்னை ஏழுகிணறு பகுதியை சார்ந்த மாணவன் ஒருவன் 9-வது வகுப்பு பயின்று வருகிறான்.
வேதியியல் மற்றும் இந்தி பாடம் எடுக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி (39 ). மந்தைவெளியை சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் வழக்கம் போல் பாடம் எடுத்து விட்டு 3 வது பாடவேளையின் போது மாற்று வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார். இந்நேரத்தில் மாணவன் ஆசிரியை நோக்கி ஆவேசமாக பாய்ந்தான். கையில் இருந்த கத்தியால் குத்தினான். இதில் 7 இடங்களில் குத்து விழுந்தது. மாணவன் கத்தியால் குத்தியதால் அதிர்ச்சியால் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.
மாணவர்கள் அக்கம் பக்கம் ஓட துவங்கினர். கொலை செய்த மாணவன் எங்கும் ஓடாமல் வகுப்பறைக்குள்ளேயே இருந்தான். பள்ளி நிர்வாத்தினர் ஆசிரியை உமாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். இந்த சம்பவம் பள்ளியை சுற்றிஉள்ள பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்திற்கு காரணம் பள்ளியில் நடத்தைக் குறித்து பெற்றோர்களுக்கு ரிப்போர்ட் அனுப்பியது மாணவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில்தான் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவதை ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். இந்நிலையில் தமிழகத்தில் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment