பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தில் சட்டப் பேரவையை கலைத்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமுல்படுத்த எதிர்கட்சிகளான காங்கிரசும், மதசார்பற்ற ஜனதாதளமும் கோரிக்கை விடுத்துள்ளன. ஆளுநர் ஹெச்.ஆர்.பரத்வாஜை சந்தித்து இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய தாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சட்டசபை எதிர்கட்சி தலைவர் சித்தாராமைய்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அரசியல் சாசன சட்டங்களின் அடிப்படையில் ஆட்சி நடத்துவதில் பா.ஜ.க அரசு தோல்வியை தழுவிய சூழலில் 356-வது பிரிவின் படி பா.ஜ.க அரசை கலைக்கவேண்டும். அத்துடன் சட்டப் பேரவையையும் கலைக்கவேண்டும் என அவர் கூறினார்.
பா.ஜ.கவின் மூன்று அமைச்சர்கள் சட்டப்பேரவையில் நிகழ்ச்சிகள் நடந்துக்கொண்டிருக்கும் வேளையில் மொபைலில் ஆபாச படம் பார்த்த சூழலில் இக்கோரிக்கையை எதிர்கட்சியினர் விடுத்துள்ளனர். எல்லா துறைகளிலும் பா.ஜ.க அரசு தோல்வியை தழுவியுள்ளதாக சித்தாராமைய்யா கூறினார்.
அதேவேளையில், காங்கிரஸ் கட்சி விலை குறைந்த அரசியல் விளையாட்டை ஆடுவதாக முதல்வர் சதானந்தா கவுடா பதில் அளித்துள்ளார்.
அடிப்படை இல்லாத காரணம் மூலம் அரசை பாதுகாக்க 16 எம்.எல்.ஏக்களின் பதவியை 2010 ஆம் ஆண்டு சபாநாயகர் போபய்யா தகுதியிழக்கச் செய்தார் என மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான என்.சி.நானா கூறினார். இதற்கிடையே, எதிர்கட்சியினரின் அமளியை தொடர்ந்து கர்நாடகா சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment