போபால்:குடும்பத்துடன் கொலைச் செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திரிகா ராய் ஒரு குழந்தையை கடத்திச் சென்ற கும்பலை பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் கொலையில் முடிந்ததாக மத்திய பிரதேச போலீஸ் கூறுகிறது.
அண்மையில் பி.டபிள்யூ.டி பொறியாளரான ஹேமந்த் ஜாரியாவின் மகனை கடத்திச் சென்ற கும்பலை சந்திரிகாராய்க்கு தெரியும். ராய் அந்த கும்பலை மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இம்முயற்சி கொலையில் முடிந்துள்ளது என்று ம.பி போலீஸ் கூறுகிறது.
ராய் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜாரியாவிடம் வேலைப்பார்த்த அமிதும், அவரது கும்பலும் இம்மாதம் 15-ஆம் தேதி ஜாரியாவின் மகன் அனந்தை கடத்திச் சென்றனர். ஐந்து கோடி ரூபாய் பிணைத் தொகை கேட்டு மிரட்டல் விடுத்தனர். ஆனால், போலீஸ் தரப்பிலிருந்து நிர்பந்தம் அளிக்கப்பட்டதால் குழந்தையை அமிதின் கும்பல் விடுவித்தது.
இக்கும்பலை சார்ந்த வித்யா நிவாஸ் திவாரி சந்திரிகாராயின் அண்டை வீட்டுக்காரர் ஆவார். இவர் மூலமாக இந்த விபரங்களை அறிந்த ராய், அமிதின் கும்பலை மிரட்ட துவங்கினார். இம்மாதம் 17-ஆம் தேதி ராய், அவரது மனைவி துர்கா, மகன் ஜலஜ், மகள் நிஷா ஆகியோர் கொல்லப்பட்டனர். அமிதின் மொபைல் ஃபோனில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகளான வித்யா நிவாஸ் திவாரி, சுனில் மனீஷ் கோரி, ஹரேந்திர சிங், ராஜ் ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது. மேலும் 3 நபர்களை தேடி வருவதாக போலீஸ் அறிவித்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment