புதுடெல்லி:டெல்லி போலீஸார் பாட்லா ஹவுஸில் வகுப்புவாத வெறியுடன் நடத்திவரும் தேடுதல் வேட்டையை நிறுத்த கோரி அகாடமிக் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் டெல்லி போலீஸ் தலைமையகம் நோக்கி பேரணி நடத்தினர்.
பாட்லா ஹவுஸில் அண்மையில் நடந்த போலீஸாரின் நள்ளிரவு தேடுதல் நாடகம் நடந்த சூழலில் ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேசன் இந்த கண்டன பேரணிக்கு ஏற்பாடு செய்தது.
‘பொதுவாக ஜாமிஆ நகரிலும், குறிப்பாக பாட்லா ஹவுஸிலும் டெல்லி போலீஸ் வகுப்புவாத சிந்தனையுடன் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்துவதாக’ பிரபல மனித உரிமை ஆர்வலர் மனிஷா சேத்தி பேரணியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையில் குற்றம் சாட்டினார்.
எந்த வழக்கு விசாரணையிலும் துப்பு துலங்காவிட்டால் உடனே அவர்கள் ஜாமிஆ நகருக்கு தேடுதல் வேட்டைக்காக வருவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர் என்று சேத்தி மேலும் கூறினார்.
போலீசாரும், பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகளும் இப்பகுதியை குற்றவாளிகளின் மையமாக சித்தரிப்பதை அனுமதிக்க முடியாது என்று ஜாமிஆ மில்லியாவின் பேராசிரியர் அஹ்மத் சுஹைப் குற்றம் சாட்டினார். முன்னர் குண்டுவெடிப்பு வழக்கில் துவங்கிய தேடுதல் வேட்டை தற்போது வாகனத் திருட்டிலும் பரவலாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய்யா பல்கலைகழகத்தில் இரண்டு மாணவர்களை கைது செய்த டெல்லி போலீஸ், அவர்களிடமிருந்து வெள்ளை காகிதத்தில் விரல் அடையாளத்தை பதிவுச்செய்து விட்டு விடுவித்த சம்பவத்தை மெஹ்தாப் ஆலம் குறிப்பிட்டார். ஒரு வழக்கிலும் தொடர்பில்லாத இரண்டு மாணவர்களின் விரல் அடையாளத்தை ஏன் போலீஸ் கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்துள்ளது என்பதை விளக்கவேண்டும். அவர்களை இதர வழக்குகளில் சிக்கவக்க டெல்லி போலீஸ் முயற்சிக்கிறது என்று மெஹ்தாப் ஆலம் கூறினார்.
மனிஷா சேத்தி, அஹ்மத் சுஹைப், ஆதில் மெஹ்தி, மெஹ்தாப் ஆலம் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த கண்டன பேரணியை டெல்லி போலீஸ் தலைமையகத்தில் போலீஸ் தடுத்து நிறுத்தியது.
0 கருத்துரைகள்:
Post a Comment