Saturday, February 25, 2012

கர்நாடகா:முதல்வர் பதவி கிடையாது – எடியூரப்பாவின் ஆசையில் மண்!

yediruppa
பெங்களூர்:முதல்வர் பதவிக்காக பகீரத முயற்சியில் ஈடுபட்ட எடியூரப்பாவின் ஆசையில் மண் விழுந்துள்ளது. இம்மாதம் 27-ஆம் தேதிக்குள் மீண்டும் தன்னை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று எடியூரப்பா இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும், பலன் இல்லை. கட்சியின் மத்திய தலைமை எடியூரப்பாவுக்கு பெப்பே காட்டிவிட்டது. அவரது கோரிக்கையை நிராகரித்த பா.ஜ.க மேலிடம், முதல்வர் டி.வி.சதானந்தாகவுடாவை தற்போது மாற்ற தேவையில்லை என்றும், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எடியூரப்பா, தான் குற்றவாளியில்லை என்பதை நிரூபிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

எடியூரப்பாவின் கோரிக்கையை கட்சி நிராகரித்ததை தொடர்ந்து தென்னிந்தியாவில் பா.ஜ.க முதன் முறையாக ஆட்சிக்கு வந்த கர்நாடகாவில் கட்சியிலும்,அரசிலும் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. கர்நாடாகாவில் எம்.எல்.ஏக்களுக்கும், அமைச்சர்களுக்கு நன்னடத்தை பயிற்சி அளிக்க பெங்களூரில் நடந்த சிந்தன் பைடெக்கில் பங்கேற்க நேற்று முன்தினம் பா.ஜ.கவின் தேசிய தலைவர் நிதின் கட்கரி வருகை தந்திருந்தார். கட்சி தலைவர் வருகையையொட்டி தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களின் கூட்டத்தை கூட்டிய எடியூரப்பா, முதல்வர் ஆவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்தார். ஆனால், கர்நாடாக முதல்வர் பதவியில் எவ்வித மாற்றமுமில்லை என்றும், சதானந்தா கவுடா முதல்வராக தொடர்வார் என்றும் நேற்று செய்தியாளர்களிடம் கட்கரி கூறினார்.

இதனிடையே, கட்சியில் அதிகாரபோட்டி தீவிரமடைந்ததை தொடர்ந்து பெங்களூரில் இரண்டு தினங்களாக நடைபெறவிருந்த நன்னடத்தை பயிற்சி வகுப்பு ஒரு நாளாக சுருக்கப்பட்டது. கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் டி.டி.ரவி இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பலத்த வாக்குவாதங்கள் நிலவியுள்ளது. முதல்வர் பதவி கிடைத்தே தீரவேண்டும் என்ற எடியூரப்பாவின் உறுதியான முடிவும் நிகழ்ச்சி கால அளவை குறைக்கும் முடிவை எடுக்க நேர்ந்தது. ஆனால், மார்ச் 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் உடுப்பி, சிக்மகளூர் மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கூடுதல் கவனத்தை செலுத்த நிகழ்ச்சியின் கால அளவை குறைத்துள்ளதாக ரவி மழுப்பலான பதிலை தெரிவித்தார்.

நன்னடத்தை பயிற்சி நிகழ்ச்சி நடைபெறும் வேளையில் கடுமையான கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ள போதிலும், இது அனைத்து கட்சிகளிலும் சாதாரணமான விஷயம் என்று பா.ஜ.க மாநில தலைவர் கெ.எஸ்.ஈஸ்வரப்பா கூறுகிறார். கட்கரி தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் வருவார் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். ஆனால், எடியூரப்பாவின் பிடிவாதம் கர்நாடகா பா.ஜ.கவில் நெருக்கடியை மேலும் சிக்கலாக மாற்றும் என்றே கருதப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza